`இப்பதான் வாழ்வதற்கான நம்பிக்கை வந்திருக்கு!’ - இரண்டு மகள்களோடு நெகிழ்ச்சியடைந்த தாய் | Gaja cyclone - Woman to get new house

வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:41 (20/12/2018)

`இப்பதான் வாழ்வதற்கான நம்பிக்கை வந்திருக்கு!’ - இரண்டு மகள்களோடு நெகிழ்ச்சியடைந்த தாய்

ஒரே நேரத்தில் இரண்டு புயல்களைச் சந்தித்து இரண்டு மகள்களோடு துயரத்தின் பிடியில் சிக்கித் தவித்த மன்னார்குடி வனிதா, இப்போது மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறார். அவருக்கு உயிர் ஆர்கானிக் அமைப்பினர் வீடு கட்டிக் கொடுக்கும் பணியைத் தொடங்கி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ``இப்பதான்  நானும் என் பிள்ளைகளும் வாழ்வதற்கான நம்பிக்கை வந்திருக்கு. இதை சாத்தியமாக்கிய விகடனுக்கு நன்றி'' என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

குடிசை வீட்டில் வனிதா

மன்னார்குடி அருகே உள்ள மேலகண்டமங்கலத்தில் வனிதா என்ற இளம்பெண் தன் கணவரையும் கஜா புயலால் வீட்டையும் இழந்து ஒரே நேரத்தில் இரண்டு புயல்களைச் சந்தித்து தன் இரு மகள்களுடன் தவித்து வருவது பற்றி விகடன் டாட் காமில், ``அப்பாவும் இல்ல வீடும் இல்ல இனி என்னம்மா செய்யப்போறோம் - தாயைக் கண்கலங்க வைத்த சிறுமிகள்'' என்ற தலைப்பில் வனிதாவின் துயரம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்தச் செய்தியைப் படித்துவிட்டு பலர் வனிதாவிடம் போன்செய்து பேசியதோடு பொருளாதார ரீதியிலும் வீடு கட்டுவதற்கும் உதவுவதாகக் கூறினர்.

தாய் வனிதா

அதன்படி ஈரோட்டை சேர்ந்த உயிர் ஆர்கானிக் அமைப்பினர் வனிதாவுக்கு வீடு கட்டித் தருவதற்கு முன் வந்தனர். இந்தத் தகவல் நடிகர் ராகவா லாரன்ஸ் கவனத்துக்கும் சென்றது. அவர் உயிர் ஆர்கானிக் அமைப்பைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரிடம் வீட்டைக் கட்டி முடித்துக் கொடுங்கள். அதற்கான செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு, பத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களோடு மேலகண்டமங்கலம் வந்தனர். அவர்களை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கபாபு வழி நடத்தினார்.

உயிர் ஆர்கானிக் அமைப்பினர்

 `இந்த இடத்தில்தான் என் கணவர் வீடு கட்டுவதற்கு ஆசைப்பட்டார். இங்கேயே கட்டிக் கொடுத்துவிடுங்கள். என் கணவர் மூச்சுக் காற்று சுழலும் இடத்திலேயே நானும் வாழ்கிறேன்' என கண் கலங்கியபடி வனிதா கூற, சொன்ன இடத்திலேயே வீடு கட்டும் பணிகளை உற்சாகமாகத் தொடங்கினர். 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இந்தப் பணியைச் செய்ததால் தற்போது வீடு கட்டும் பணி நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இப்போதுதான் வனிதா மற்றும் அவர் மகள்களான தனுஷியா, சோபியாவின் முகத்தில் லேசான புன்னகை படர்வதைப் பார்க்க முடிகிறது.

பிள்ளைகளுடன் வனிதா

இது குறித்து வனிதாவிடம் பேசினோம். ``ஒரு வீடு கட்டணும், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கணும் என்று ஆசைப்பட்டு கனவு கண்ட என் கணவர் அதை நிறைவேற்றுவதற்காகக் கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு அவர் இறந்துவிட அவர் உடல் மட்டும் இங்கு வந்தது. அவர் கனவும் ஆசையும் அப்படியே கரைந்துபோனது. இந்தச் சூழ்நிலையில் புயலால் வீட்டையும் இழந்து நிர்க்கதியாய் நின்னோம். இனி என்னம்மா செய்யப்போகிறோம் என என் புள்ளையங்க கலங்கி கேட்டபோது என்னிடம் நம்பிக்கையான வார்த்தைகள்கூட இல்லை. ஏன், இனி வாழ்வேனா என்ற நம்பிக்கையும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் கஷ்டத்தை விகடன் செய்தி வெளியிட்டது. இதைப் பார்த்து எனக்கு வீடு கட்டி கொடுக்க உயிர் ஆர்கானிக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்களின் சொந்த சகோதரிக்கு வீடு கட்டிக் கொடுப்பதுபோல் பார்த்து பார்த்து கட்டி வருகின்றனர். இப்பதான் நானும் என் பிள்ளைகளும் வாழ்வதற்கான நம்பிக்கை வந்திருக்கு. இதைச் சாத்தியமாக்கிய விகடனுக்கு எங்கள் வாழ்நாள் நன்றிகள்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க