``சமைச்சதுக்கப்புறமும் பாத்திரத்துக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கேன்’ - சமையலர் பாப்பாள்! | How does she now - Tirupur cook Pappal

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (20/12/2018)

கடைசி தொடர்பு:20:21 (20/12/2018)

``சமைச்சதுக்கப்புறமும் பாத்திரத்துக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கேன்’ - சமையலர் பாப்பாள்!

``என் புள்ளைங்களுக்கு நான் சமைச்சுப் போடக் கூடாதா?’’ என்ற சமையலர் பாப்பாள் அம்மாவின் கண்ணீர்க்குரலை, சாதி மறுப்பாளர்கள் மட்டுமல்ல, அதில் பிடிமானம் கொண்டவர்கள்கூட மறந்திருக்க மாட்டார்கள். 

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள திருமலை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாப்பாள், தன் சமையலர் பணியின் 12 வருடங்களுக்குப் பிறகு, சொந்த ஊரில் இருக்கிற உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். சொந்த ஊரிலேயே வேலைபார்க்கப் போகிறோம் என ஆசை ஆசையாக வந்தவரை, அவருடைய சாதியின் பெயரைச் சொல்லி திருப்பி அனுப்பினார்கள். இதற்காக நியாயம் கேட்டுப் போராடியவருக்குத் துணையாகவும், ஆதிக்கச் சாதியினருக்கு எதிராகவும் தமிழகம் முழுக்கக் கண்டனக் குரல்கள் எழும்பின. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பாப்பாளுக்கு வழங்கிய பணியிட மாற்றத்தை ரத்து செய்தது. மீண்டும் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியிலேயே பணிபுரிய உத்தரவுமிட்டது.  

பாப்பாள்

அப்படியும் பிரச்னை ஓயவில்லை. பாப்பாள் சமைத்த சத்துணவில் இறந்துபோன பல்லி கிடந்தது என்று, 12 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாப்பாளை எப்படியாவது இந்தப் பள்ளியைவிட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சூழ்ச்சி என்றே இந்தச் சம்பவம் சொல்லப்பட்டது. இத்தனை இடிகளுக்கும் அசராமல் அந்தப் பள்ளிக்கூடத்திலேயே தன் சமையலர் பணியைத் தொடர்ந்து வரும் பாப்பாள் தற்போது எப்படியிருக்கிறார்? அவரிடம் பேசினோம். 

``முதல்ல நிறைய குழந்தைங்க நான் சமைச்சதை சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. பல்லி விழுந்ததுன்னு சொன்னதுக்கப்புறம் இப்ப கொஞ்சம் பேர்தான் சாப்பிடுறாங்க. இப்பயெல்லாம், சமைச்சதுக்கப்புறம் பிள்ளைங்க எல்லாம் வந்து சாப்பிடுற வரைக்கும் சாப்பாட்டுப் பாத்திரம் பக்கத்துலேயே உட்கார்ந்திருக்கேன்மா'' என்றவரிடம், பழைய பிரச்னைகள் ஏதாவது மறுபடியும் எழுகின்றனவா என்றோம். ``அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. ஊர்க்காரங்க எல்லாம் நல்லமாதிரிதான் இருக்காங்கம்மா'' என்றவர் நம்மிடமும் மறக்காமல் கேட்டார். 

``சாப்பிட்டீங்களாம்மா..?’’ 

அதுதான் பாப்பாள்!