`மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்!’ - தமிழிசை | BJP state president tamilisai speaks about Sterlite industries

வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:38 (21/12/2018)

`மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்!’ - தமிழிசை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளைக் கொண்டுதான் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

தமிழிசை

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்திருந்தார் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``பொன்.மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது ‘தன்னுடன் பணியாற்றும் குழுவினருடன் இணைந்து சிலைகளை மீட்பேன்’ எனத் தெரிவித்திருந்தார். தற்போது அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏன் வந்தது எனத் தெரியவில்லை. பிரச்னைகள் எப்படி இருந்தாலும் அரசாங்கமும் அவருக்குத் துணை நின்று அவர் விரைவாகச் சிலைகளை மீட்கக் காவல்துறையும், தமிழக அரசும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எந்தவிதத்திலும் அவருக்கு இடையூறு ஏற்படுத்திடக் கூடாது. 

ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை தமிழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளை வைத்துத்தான் பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமானால், எந்தத் திட்டமாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டோம். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டால் அதைத் திறப்பதற்கு நிச்சயமாக எதிர்ப்போம். தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு பா.ஜ.க உதவி செய்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகள் பாய்ந்து ஓடுகிறதென்றால் அதற்கு மோடி அரசுதான் காரணம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க