`முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு இழப்பீடு’ - நாட்டிலே முதன்முறையாக டெல்லியில் அறிமுகம்! | Delhi Consumers To Get Compensation For Unscheduled Power Cuts

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (20/12/2018)

கடைசி தொடர்பு:10:37 (23/12/2018)

`முன் அறிவிப்பு இல்லாத மின்வெட்டுக்கு இழப்பீடு’ - நாட்டிலே முதன்முறையாக டெல்லியில் அறிமுகம்!

முன் அறிவிப்பில்லாமல் மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

மின்வெட்டு இல்லாத மாநிலத்தை உருவாக்க அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படியிருக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி முன் அறிவிப்பில்லாமல் ஏற்படும் மின்வெட்டுக்கு, தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன் அறிவிப்பில்லாமல் 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டால் 50 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

மின்வெட்டு

அதுவே மின்வெட்டு இரண்டு மணிநேரத்தைத் தாண்டினால், இழப்பீடு தொகை 100 ரூபாயாக இழப்பீடு வழங்கப்படும். முதல் இரண்டு மணி நேரத்துக்கு 50 ரூபாயும் அதையடுத்து நீடிக்கும் ஒவ்வொரு மணி நேர மின்வெட்டுக்கு 100 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,000 வரை இழப்பீடுத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பலரும் வரவேற்றுள்ளனர். நீண்ட நாள் ஆலோசனைக்கு பிறகு, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தாற்போல டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை மாற்றி அமைத்துள்ளது.

காற்றாலை

இது தொடர்பாக ஆம் ஆத்மி சார்பில் ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவிலே முதல் மாநிலமாக முன் அறிவிப்பில்லாத மின்வெட்டுக்கு டெல்லி அரசு, இழப்பீடு வழங்கியுள்ளது” என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ஒப்புதல் அளித்துள்ளார். இழப்பீடு வழங்கும் இந்தத் திட்டம் முன்னதாகவே ஆம்ஆத்மி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு,முறையான கையொப்பம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.