`தேர்தல் பணியாற்றுவதில் வல்லவர் செந்தில் பாலாஜி!' - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு | DMK former minister KN Nehru praises Senthil Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 22:02 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:50 (21/12/2018)

`தேர்தல் பணியாற்றுவதில் வல்லவர் செந்தில் பாலாஜி!' - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

``செந்தில்பாலாஜி தி.மு.கவுக்கு வந்திருப்பதால், தி.மு.கவுக்கு மிகப்பெரிய பலம் கிடைத்திருப்பதாக நம்புகிறோம். சிறப்பாக தேர்தல் பணியாற்றக்கூடியவர் செந்தில்பாலாஜி" என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சிலாகித்துப் பேசினார்.

கே.என்.நேரு

 அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. அ.ம.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு கருத்து வேறுபாடு மற்றும் தனது அரசியல் எதிர்காலத்துக்காகவும் 2000 ஆதரவாளர்களோடு கடந்த வாரம் சென்னையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அதோடு, வரும் 27-ம் தேதி கரூரில் ஸ்டாலினை வைத்து மிகப்பிரமாண்டமான முறையில் பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறார்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் வைத்து கரூர் அ.ம.மு.க-வினர் மற்றும் கொங்கு மண்டல அளவில் உள்ளவர்கள், ஆளுங்கட்சி மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேரை தி.மு.க-வில் இணைக்க இருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் ராயனூர் அருகே உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வைத்து இன்று பந்தற்கால் நடும் விழாவை நடத்தினார் செந்தில்பாலாஜி. இந்த விழாவில் தி.மு.க புள்ளிகளான கே.சி.பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் கலந்துகொண்டனர்.

செந்தில் பாலாஜி

விழா முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, ``செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து கடந்தவாரம் சென்னையில் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க-வில் இணைந்தார். வரும் 27-ம் தேதி செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் மேலும் ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்களை தி.மு.க-வில் இணைக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. இதற்காக, விழா பந்தல் அமைக்கும் துவக்கப் பணியை பார்வையிட வந்துள்ளேன். செந்தில் பாலாஜி வருகையால் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பலம் என நம்புகிறோம். அ.ம.மு.க ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, செந்தில்பாலாஜியுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள்கூட தி.மு.க-வில் இணைய பேசிய வருகிறார்கள். நல்ல தேர்தல் களப்பணியாற்றக்கூடிய நபர் செந்தில்பாலாஜி. என்னைப்போன்று போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் பெற்றவராகவும் இருப்பவர் தி.மு.கவில் இணைத்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

பொதுக்கூட்ட பந்தற்கால் நடும் நிகழ்ச்சி..

 அவரிடம் செய்தியாளர்கள், `செந்தில்பாலாஜி தி.மு.க-வில் ஓரங்கட்டப்படுவார்' என கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த கே.என்.நேரு,``தி.மு.க-வில் ஊராட்சிக்கு ஒரு செயலாளர் என இருக்கும் இந்தக் காலத்தில், ஒருவர் வந்தால் இன்னொருவர் ஓரங்கட்டப்படுவார் எனக் கூறுவது சரியல்ல. தி.மு.க ஒரு மாபெரும் இயக்கம். புதியவர்களுக்கு மதிப்பளிக்கும் வாய்ப்பளிக்கும் இயக்கம்" என்றார். அப்போது ஒரு நிருபர், `செந்தில் பாலாஜிக்கு தி.மு.க-வில் பொறுப்பு அளிக்கப்படுமா?" என்று கேட்ட கேள்விக்கு, ``நான் சாதாரணமான நபர்" என நகைச்சுவையாக நழுவல் பதிலை அளித்துவிட்டு எஸ்கேப் ஆனார். அதன்பிறகு, தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி, கரூர் சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார் கே.என்.நேரு. அங்கே பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. ஆனால், முக்கிய விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்டதாக மாவட்ட நிர்வாகிகள் கிசுகிசுத்தனர்.