மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 49 பேரை விடுவிக்க நடவடிக்கை! - கனிமொழிக்கு கண்ணீர் மல்க பெண்கள் நன்றி | Kanimozhi take action to release 49 people in Malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/12/2018)

கடைசி தொடர்பு:07:55 (21/12/2018)

மலேசியாவில் சிக்கித் தவிக்கும் 49 பேரை விடுவிக்க நடவடிக்கை! - கனிமொழிக்கு கண்ணீர் மல்க பெண்கள் நன்றி

நெல்லையிலிருந்து மலேசியாவுக்குச் சென்ற 49 தமிழர்களை விடுவிக்க தி.மு.க எம்பி கனிமொழி நடவடிக்கை எடுத்ததற்கு அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர். 

கனிமொழி

திராவிட முன்னேற்றகழக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 2-ம் தேதி நெல்லை சென்றிருந்தார். அப்போது வாசுதேவன் நல்லூர் ஒன்றியம் தலவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை ஒன்று முன் வைத்தனர். அப்போது  மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனும் உடனிருந்தார். அங்கிருந்த பெண்கள் கனிமொழியிடம், ``மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 49 பேர்  சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர்களை யாரோ பிடித்து வைத்துள்ளதாகவும், கஷ்டப்படுவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

கனமொழி

அதை பார்த்ததும் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பல அதிகாரிகளை சந்தித்தோம் ஒன்றும் பலனில்லை. நீங்கள் எப்படியாவது அவர்களை மீட்டுத் தரவேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த கனிமொழி, வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளார். அப்போது,  விசா பிரச்னை காரணமாக 49 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். இதையறிந்த கனிமொழி, இந்தியத் தூதரக அதிகாரியிடம் அவர்களை விடுவிக்க கோரி அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் எதிரொலியாக பாதிக்கப்பட்ட 49 பேரும் ஜனவரி 19-ம் தேதி அன்று வரும் வழக்கின் இறுதி அமர்வு முடிந்தததும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தி.மு.க நிர்வாகிகள் அந்த மக்களுக்குத் தெரியபடுத்தியுள்ளனர். இதை அறிந்த அந்தப் பெண்கள், தி.மு.க எம்.பி கனிமொழிக்கு கண்ணீர்மல்க தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.