சாக்குப்பைகளில் அடைத்து நூதனமுறையில் தாதுமணல் திருட்டு! - லாரியை மடக்கிப் பிடித்த நாங்குநேரி போலீஸார் | Nanguneri police arrests lorry driver, owner for illegal sand mining

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:08:14 (21/12/2018)

சாக்குப்பைகளில் அடைத்து நூதனமுறையில் தாதுமணல் திருட்டு! - லாரியை மடக்கிப் பிடித்த நாங்குநேரி போலீஸார்

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாகத் தாது மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார் அந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் மணல் ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாது மணல் கடத்திய லாரி

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் மணலில் அரிய வகைத் தாதுகளான கார்னெட், ரூட்டைல், சிலிக்கான் உள்ளிட்டவை கிடைக்கின்றன. வெளிநாட்டுச் சந்தைகளில் இந்த தாதுகளுக்கு கிராக்கி அதிகம் என்பதால், இந்த தாதுகளைப் பிரித்து எடுக்கும் ஆலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. இந்த ஆலைகள் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாக தமிழக அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் சென்றதால், முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இந்த ஆலைகள் இயங்கத் தடை விதித்தார்.

அத்துடன், தாது மணல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதனால் வருவாயை இழந்த ஆலை அதிபர்கள், ஊழியர்களைத் தூண்டிவிட்டு ஆலையைத் திறக்க வேண்டும் என அரசுக்குத் கோரிக்கை விடுக்கச் செய்தனர். ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தவரையிலும் தாது மணல் ஆலைகளைத் திறக்க அனுமதிக்கவே இல்லை. 

லாரி பறிமுதல்

அதன் பின்னர் வந்த எடப்பாடி அரசிடமும் ஆலை நிறுவனங்களின் சார்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மத்திய மாநில அரசுகள் அதற்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டன. ஆகவே, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரைக் கையில்போட்டுக் கொண்டு சத்தம் இல்லாமல் தாது மணலில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதற்கு சில காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

``தாது மணலைப் பிரித்து அதிலிருந்து தாதுகளை எடுத்தால் ஆலை இயங்குவது தெரிந்துவிடும் என்பதால் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் தாதுமணலை எடுத்துச் சென்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகமோ மாவட்ட காவல்துறையோ இந்தச் சம்பவங்கள் குறித்து அறியாமல் இருக்கின்றனவா அல்லது அறிந்து கண்மூடி மௌனமாக இருக்கின்றனவா எனத் தெரியவில்லை ’’ எனக் குமுறுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் வழக்கமான வாகனச் சோதனையில் போலீஸார் ஈடுபட்டபோது அந்த வழியாக ஒரு லாரி வந்துள்ளது. அதை போலீஸார் சோதனையிட்டபோது அதன் உள்ளே 10 கிலோ எடைகொண்ட சிறிய பைகள் இருந்துள்ளன. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் தாது மணல் இருந்துள்ளது. அந்த தாது மணலை சென்னைக்குக் கொண்டுசென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்த விவரம் தெரியவந்துள்ளது.

அனுமதிச் சீட்டு எதுவும் இல்லாமல் சிறிய பைகளில் அடைத்து கடத்திச் செல்லப்பட்ட தாதுமணலை ஏற்றிச் சென்ற லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார் அதை கனிமத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அனுமதி இல்லாமல் தாதுமணல் கடத்தியதாக நாங்குநேரி போலீஸார், லாரி ஓட்டுநர் அன்வர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தாதுமணல் ஆலையின் உரிமையாளரான சுகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நூதன முறையில் பைகளில் அடைத்து தாது மணலைத் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.