திருப்பூரில் காவலர்களின் குழந்தைகளைக் காக்கும் காப்பகம் தொடக்கம் | Child care is opened in Tirupur District

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:08:41 (21/12/2018)

திருப்பூரில் காவலர்களின் குழந்தைகளைக் காக்கும் காப்பகம் தொடக்கம்

திருப்பூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டிருப்பது காவலர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்துவருகிறது.

காவல்துறை

திருப்பூர் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. அப்படி காவலர்கள் பணியாற்றச் செல்லும்போது, தங்களது வீடுகளில் உள்ள குழந்தைகளை முறையாக பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் சற்று சிரமப்படுகிறார்கள். இந்தச் சிக்கல்களை களைவதற்காக நல்லூர் என்ற பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் காவலர்களின் குழந்தைகள் நல காப்பகம் தற்போது துவங்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி இந்தக் காப்பகத்தை நேற்று திறந்து வைத்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், ``தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கக்கூடிய இந்தக் காப்பகத்தில், பணிக்குச் செல்லும் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் தங்களின் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளை விட்டுச் செல்லலாம். இங்கு குழந்தைகளை பராமரிப்பதற்காகவே தனியாக 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு விளையாட்டுப் பொருள்களும், குழந்தைகளுக்குத் தேவையான பால் மற்றும் மதிய உணவு வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் பணியில் தினந்தோறும் அயராது உழைக்கும் ஆயுதப்படை காவலர்கள், தங்களது பணி நேரத்தில் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பற்றியும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் யோசித்து குழப்பிக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. காவல்துறையே அவர்களைப் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்'' என்றனர்.