`காவிரி விவகாரத்தில் சதி நடக்கிறது!'- விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி குற்றச்சாட்டு | Nallasamy about cauvery issue

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (21/12/2018)

கடைசி தொடர்பு:11:50 (21/12/2018)

`காவிரி விவகாரத்தில் சதி நடக்கிறது!'- விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி குற்றச்சாட்டு

``கர்நாடக மாநிலத்தின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி போன்ற அடிப்படைத் தேவைகளை காரணம் காட்டி காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது சதி'' எனக் குற்றச்சாட்டுகிறார் விவசாய சங்கத் தலைவர் நல்லுசாமி.

நல்லுசாமி

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்காக அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் நல்லசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் தீட்சிதர் பாலசுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர் ஹேமநாதன் ஆகியோர் திருச்சிக்கு வந்திருந்தனர். நல்லசாமி கூறுகையில், ``காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு என எதையும் இதுவரை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதுநாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் விடப்பட்ட சவால். தமிழக அரசு, தினமும் நீர்பங்கீடு என்ற இலக்கை நோக்கி காவிரி வழக்கைக் கொண்டு சென்று தீர்ப்பை பெற்றிருந்தால் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடி நடந்திருக்கும். இப்போது அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரால், காவிரியில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் தமிழகத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் செல்லவில்லை. காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரி, குளம், குட்டை, கண்மாய்களுக்கும், இதர ஆறுகளுக்கும் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் நடப்பு ஆண்டில் உபரிநீர் வீணாகக் கடலுக்குச் சென்றிருக்காது. இப்போது மேக்கே தாட்டூவில் அணை கட்டும் எண்ணமும் கர்நாடக அரசுக்கு வந்திருக்காது. அதே வேளையில் மேக்கே தாட்டூவில் அணை கட்டும் திட்டமானது தமிழகத்துக்கு நன்மை பயக்கும் திட்டம் என்று கர்நாடக அமைச்சர் பேசியிருப்பது குழப்பும் எண்ணம் கொண்டது மட்டுமல்ல திட்டமிட்ட சதி. அதனால் கர்நாடக அமைச்சரின் கருத்துகள் பற்றி விவாதிக்கத் தமிழக அரசு உடனடியாக காவிரிப் பாசனப் பயனாளிகள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். தீர்ப்பைத் திருத்தக்கோரும் மறுசீராய்வு மனுவும், உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்கள் மட்டும்தான் இதற்குத் தீர்வாக அமையும்.


விவசாயிகள் சங்கம்

காவிரி ஆற்றைப் பொறுத்தமட்டில் தமிழகம் கடைமடை உரிமை பெற்றிருக்கும் மாநிலம். சர்வதேச சட்டங்களின்படி தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்திய கூட்டமைப்பில் தமிழ்நாடு இல்லாமல் தனிநாடாக இருந்திருந்தால், கடைமடை உரிமையைச் சர்வதேச சட்டப்படி மீட்டிருக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாகவே கர்நாடகம், தமிழ்நாட்டைக் காவிரியின் வடிகாலாகவே வைத்துள்ளது. எனவே, மேட்கே தாட்டூ அணை பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க