`வங்கிகள் மிரட்டுகின்றன; அவகாசம் கொடுங்கள்!'‍- இரவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட பெண்கள் | women's protest in collector office

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:28 (21/12/2018)

`வங்கிகள் மிரட்டுகின்றன; அவகாசம் கொடுங்கள்!'‍- இரவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர்விட்ட பெண்கள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தர்ணா போராட்டம்

கஜா புயல், இந்த வார்த்தையானது டெல்டா மக்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்தப் புயலால் தங்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது என்று அவலக்குரல்கள் கேட்ட வண்ணம்தான் உள்ளது. பலரின் துயரங்கள் இன்றளவும் பெருகிக்கொண்டே செல்லும் நிலையேதான் உள்ளது. 

கஜா

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் களப்பால், எழிலூர், ரெகுநாதபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். தற்போது வீசிய கஜா புயலினால் 12 கிராமங்களில் வீடுகளை இழந்து தவிக்கும் பெண்களுக்குத் தனியார் வங்கியில் பெற்ற கடனைக் கட்ட 6 மாதம் அவகாசம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம்

அப்போது அவர்கள், `தனியார் வங்கி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து மிரட்டுவதாகக் குற்றம்சாட்டினர்.  ``இப்போதுதான் முகாம்களிலிருந்தே வீடு திரும்பினோம். இந்நிலையில் நாங்கள் செய்வதறியாது இருக்கின்றோம்” என்றனர் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளில் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். பெண்களின் இந்தத் திடீர் தர்ணா காரணமாக இரவில் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.