`அபிராமியைச் சந்திக்கவில்லை... தனியாகத்தான் வாழ்கிறேன்!' - வேதனையில் விஜய்  | I didnt meet Abirami, says Vijay

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:42 (21/12/2018)

`அபிராமியைச் சந்திக்கவில்லை... தனியாகத்தான் வாழ்கிறேன்!' - வேதனையில் விஜய் 

அபிராமி

``பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த வழக்கில் கைதான அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன்'' என்று அவரின் கணவர் விஜய் கண்ணீர்மல்க தெரிவித்தார். 

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த 1.9.2018ல் அபிராமி, தன்னுடைய இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்தைச் சந்திக்க வெளியூர் சென்றார். குழந்தைகள் இறந்து கிடந்ததைப் பார்த்த விஜய், குன்றத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்கு பதிவு செய்து அபிராமியையும் சுந்தரத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தார். 

தவறான நட்புக்காக பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் அபிராமியின் வழக்கறிஞர், ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி, ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன், மனுவைத் தள்ளுபடி செய்தார். இதனால் அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 

அபிராமி

இந்த நிலையில், அபிராமி வழக்கில் 90 நாள்கள் நிறைவடைந்ததையடுத்து குற்றப்பத்திரிகையை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து இன்று அபிராமி வழக்கில் விசாரணை தொடங்கியது. இதற்காக அபிராமி, சுந்தரம் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். 

இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கூறுகையில், ``பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமிக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அபிராமி வழக்கில் போலீஸாருடன் இணைந்து அபிராமிக்குத் தண்டனை கிடைக்கும்வரை நான் போராடுவேன்" என்றார். 

 அபிராமியுடன் கணவர் விஜய்

அபிராமியின் கணவர் விஜய்யிடம் பேசினோம். ``அபிராமிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவலை செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர் சிறைக்குச் சென்ற நாள் முதல் இன்றுவரை அவரை நான் சந்திக்கவில்லை. குழந்தைகள் இறந்த சமயத்தில் அபிராமியின் பெற்றோருடன் குடியிருந்தேன். தற்போது தனியாகத்தான் வாழ்கிறேன். அபிராமி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. ஆனால், அங்கு நான் செல்லவில்லை. என்னை யாரும் அழைக்கவில்லை" என்றார் கண்ணீர்மல்க. 

போலீஸாரிடம் பேசினோம். ``அபிராமிக்கும் சுந்தரத்துக்கும் விரைவில் தண்டனை வாங்கிக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டு புலன்விசாரணைக்குப்பிறகு குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியிருக்கிறது. விசாரணையை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், அபிராமிக்கு ஜாமீன் கேட்டு மூன்று முறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் அபிராமிக்கு இந்தமுறையும் ஜாமீன் வழங்கப்படவில்லை" என்றனர். 

 சுந்தரம்

சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சிறைக்கு வந்த சமயத்தில் அபிராமி யாருடனும் சகஜமாக பேசாமல் அமைதியாக இருந்தார். குழந்தைகளை நினைத்து அடிக்கடி அழுவார். கடும் மனஅழுத்தத்திலும் இருந்தார். கடந்த மாதத்தில் அபிராமியைச் சந்திக்க அவரின் வழக்கறிஞர் ஒருவர் வந்தார். அவரிடம், தன்னை ஜாமீனில் எடுக்கும்படி அபிராமி கூறினார். இதனால் ஜாமீனில் எடுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஜாமீன் கிடைக்கவில்லை என்ற தகவலைக் கேட்டு மனவருத்தத்தில் இருந்தார். சிறையிலிருந்து என்று வெளியில் செல்வோம் என்ற மனநிலையில்தான் அவர் இருந்துவருகிறார். அவருக்குத் தேவையான கவுன்சலிங் கொடுத்துள்ளோம். இதனால்தான் அபிராமி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைமைக்குத் திரும்பினார்" என்றனர்.