`என்னை இழுத்துவிடாதீங்க!' - எய்ம்ஸுக்குத் தலைவர்கள் பெயர் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் | TN health secretary Radhakrishnan speaks about AIIMS hospital

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (21/12/2018)

கடைசி தொடர்பு:13:35 (21/12/2018)

`என்னை இழுத்துவிடாதீங்க!' - எய்ம்ஸுக்குத் தலைவர்கள் பெயர் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில்

``மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்ட வாய்ப்பில்லை'' எனத் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

 ஆய்வில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

 

மதுரையில் 150 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாமல் உள்ளது. இதை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வு செய்தும் சில காரணங்களுக்காக திறக்கத் தாமதம் செய்துவருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், ``மதுரையில் சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போதைய ஆய்வு, திறக்கப்படுவது தொடர்பான ஆய்வுதான். இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் நோயாளிகள் அதிக அளவு பயனடைய உள்ளனர். இங்கு பல உயர்தர வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எய்ம்ஸுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தும் ராதாகிருஷ்ணன்

மதுரை அரசு மருத்துவமனைக்கு சராசரியாக இங்கே உள்ள பொதுமக்கள் 6,000 பேர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் உள்ளனர். சில காரணங்களினால் இந்த மருத்துவமனை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த முறை அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. ஜனவரி 10-க்குள் பாதி மருத்துவத்துறைகள் இங்கே செயல்படும். 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளது. மதுரை அரசு மருத்துவமனை படிப்படியாக மறு சீராய்வு செய்து சில மாற்றங்கள் செய்யப்படும்" என்றார்.

 தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை

எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தலைவர்களின் பெயர் இடம் பெறுமா என்ற கேள்விக்கு, `மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்ட வாய்ப்பில்லை. ஆனால், அதை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னை இதில் இழுத்துவிட வேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டார்.