`ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு; அமைச்சர் வீரமணிக்கு சம்மன்?’- சுற்றுச்சுவர் இடிப்பால் வேலூரில் பதற்றம் | Rs. 300 crore land acquisition in Vellore; case filed against Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (21/12/2018)

`ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு; அமைச்சர் வீரமணிக்கு சம்மன்?’- சுற்றுச்சுவர் இடிப்பால் வேலூரில் பதற்றம்

வேலூரில் அமைச்சர் வீரமணி தொடர்புடைய ரூ.300 கோடி நிலத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிக்கப்பட்டது. அமைச்சரின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் திரண்டு ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 வீரமணி

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் சுந்தர்ராஜன் என்பவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. அதை, காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் 2010-ம் ஆண்டுக் குத்தகைக்கு எடுத்து கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விட்டனர். இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து, நிலத்தை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி, தி.மு.க எம்.எல்.ஏக்கள் காந்தி, நந்தகுமார் அந்த இரண்டு ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோத்தனர். இந்த 5 பேரும் சேர்ந்து முதலீடு செய்து நிலத்தை மேம்படுத்தி விற்பனை செய்வது எனவும், நிலத்தின் மதிப்புக்கேற்ற தொகையை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு, மீதித் தொகையை பங்கு பிரித்துக் கொள்வது எனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 

சுற்றுச்சுவர்

சில ஆண்டுகள் கழித்து, அமைச்சர் கே.சி.வீரமணியின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த பால் நிறுவன உரிமையாளர்கள் பிரம்மானந்தம் தண்டா மற்றும் சத்திய நாராயணாவுக்கு அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர்கள் விற்றனர். `ஜோத்ரி மை எஸ்டேட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் அந்த நிலம் கிரயம் செய்யப்பட்டது. நிலத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு இதற்காக 30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு திடீரென, `ஜோத்ரி மை எஸ்டேட்’ நிறுவனத்தின் பங்குகளை சேகர்ரெட்டியே வாங்கிவிட்டார். நிலத்தை மேம்படுத்தியதற்காக ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயபிரகாஷ் இருவருக்கும் ரூ.65 கோடி தருவதாக சேகர்ரெட்டி கூறினார். முதற்கட்டமாக, 19 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மீதித் தொகை தருவதில் சேகர்ரெட்டிக்கு ஆதரவாக அமைச்சர் வீரமணி தலையிட்டதாகக் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் அதிபர்கள் மிரட்டப்பட்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமானதாக கூறப்படுகிறது.

சுற்றுச்சுவர்

அமைச்சர் வீரமணி, சேகர்ரெட்டி, நிலம் கிரயம் செய்யப்பட்ட ஜோத்ரி மை எஸ்டேட் நிறுவனம் மீது ரியல் எஸ்டேட் அதிபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, வேலூர் சார்பு நீதிமன்றத்தில் அமைச்சர், சேகர்ரெட்டிக்கு எதிராக ரியல் எஸ்டேட் அதிபர்கள் நேற்று மற்றொரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக அமைச்சர் வீரமணி வரும் 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று `சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில், இன்று அதிகாலை பிரச்னைக்குரிய அந்த இடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சுற்றுச்சுவரை ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பினர் அதிரடியாக இடித்துத் தள்ளினர். மேலும் சுற்றுச்சுவர் நுழைவு வாயிலையும் கன்டெய்னர் பெட்டியை வைத்து அடைத்தனர். 

சுற்றுச்சுவர்

தகவலறிந்ததும், வேலூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். மாநகருக்குள் புதிய பஸ் நிலைய பகுதி என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டது. சுற்றுச்சுவரை இடித்தது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் உடன் மேலும் சிலரை போலீஸார் பிடித்துச் சென்றனர். எஸ்.பி பிரவேஷ்குமார் அந்த இடத்தைப் பார்வையிட்டார். இதுபற்றி தகவலறிந்ததும், அமைச்சர் மற்றும் சேகர்ரெட்டியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். ரகளையில் ஈடுபட்ட அவர்கள், கடைகளை மூடுமாறு மிரட்டினர். ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பினர் நுழைவு வாயிலில் வைத்த கன்டெய்னர் பெட்டியை அமைச்சர் ஆதரவாளர்கள் கிரேன் மூலம் தூக்கி வீசினர். இதனால் பரபரப்பு அதிகரித்துள்ளது.