வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:47 (21/12/2018)

`மத்திய அரசே, அறிவியல் ரீதியான பட்டாசு தயாரிப்பை சொல்லுங்க!'- போராட்டக்காரர்கள் மத்தியில் ராஜேந்திரபாலாஜி முழக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் 1007 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தொழிலையே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பட்டாசு உற்பத்திக்குக் கடும் கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், பசுமை பட்டாசு என்றால் என்னவென்றே இவர்களுக்கு விளக்கமளிக்காத காரணத்தால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிவகாசியைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

விருதுநகர் பட்டாசு  தொழிலாளர்களின் போராட்டம்

இந்நிலையில் உடனடியாக பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டாசுத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பட்டாசுத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர்.

போராட்டம்

சி.ஐ.டி.யூ. மாநிலத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன் பேசும்போது, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே தீப்பெட்டி தொழில் அழிவை நோக்கிச் சென்றுவிட்டது. எனவே, அந்தத் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலுக்குத் திரும்பினர். தற்போது பட்டாசுத் தொழிலுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்ததால் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீபாவளியிலிருந்து பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர். பட்டாசுத் தொழில் என்பது பாரம்பர்யத் தொழில்களில் ஒன்று.

போராட்டம்

இந்தத் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிமுறையை நமக்கு யாரும் கற்றுத்தரவில்லை. நாமாகவே கற்றறிந்தோம். எனவே, மூட வேண்டும் எனக் கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என உத்தரவிடுவது சுலபம். ஆனால் செயல்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்ள கால அவகாசம் வேண்டாமா? பட்டாசுத் தொழில் அழிந்தால் ஆண்டுக்கு ரூ.6000 கோடி வரை இழப்பு ஏற்படும். பட்டாசுத் தொழில் அழிவு என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார அழிவாக மாறும். சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேரை படுகொலை செய்தாலும் கூட அந்தப் போராட்டம் அடங்கவில்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். பட்டாசு உற்பத்திக்கான தீர்ப்பை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பட்டாசு தொழிலைப் பாதுகாக்க தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பட்டாசுத் தொழிலைக் காப்பாற்றி தமிழகப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும் என்றார்.

நல்லக்கண்ணு

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ``விருதுநகர் மாவட்டத்தில் இருந்த தீப்பெட்டித் தொழில் ஏற்கெனவே அழிவை நோக்கிச் சென்றுவிட்டது. தற்போது அழியும் நிலையில் உள்ள பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். பட்டாசுத் தொழிலை தவிர இந்தப் பகுதியில் வேறு தொழில் இல்லை. அந்தத் தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு வேறு தொழில் இல்லை. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பட்டாசுத் தொழிலைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ``உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசு தயாரிக்க முடியாது என்ற காரணத்தால் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசுத் தொழில் முடங்கிக் கிடக்கிறது. பட்டாசு ஆலைகள் மூடிக்கிடக்கின்றன. 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கே சென்றாலும் பட்டாசு ஆலைகள் எப்போது திறக்கப்படும் என்றுதான் மக்கள் கேட்கின்றனர். சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

விருதுநகர் மாவட்டம்தான் வளமையான பகுதி. நாம் உழைக்கும் மக்கள். நமக்கு ஏற்பட்ட சோதனை இது. சோதனையிலிருந்து நாம் மீள வேண்டும். பசுமை பட்டாசு என்பதே தவறு. பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு எப்படித் தயாரிக்க முடியும். அறிவியல் ரீதியாக பட்டாசுகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளை திறக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மூச்சு விடுவதே மாசுதான். மாசை குறைக்க வேண்டும். பட்டாசு காரணமாகத்தான் மாசு ஏற்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது இல்லை என்பதை மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் புரிந்துகொள்ள வேண்டும். பட்டாசுத் தொழில் நடத்த தமிழக அரசு எந்தச் சூழலிலும் துணை நிற்கும். எங்களை காப்பாற்றிக் கொள்ள பட்டாசுத் தொழிலை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றார்.