ஹைடெக் மோசடி; ரூ.2,000-க்கு விற்கப்பட்ட முதலுதவி சான்றிதழ்கள்! -  சிக்கிய விரிவுரையாளர் | Certificate fraud - Professor caught by police

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (21/12/2018)

கடைசி தொடர்பு:14:32 (21/12/2018)

ஹைடெக் மோசடி; ரூ.2,000-க்கு விற்கப்பட்ட முதலுதவி சான்றிதழ்கள்! -  சிக்கிய விரிவுரையாளர்

முதலுதவி பயிற்சி அளிக்கும் நிறுவனம்

சென்னையில் செயல்படும் பிரபலமான முதலுதவி பயிற்சி நிறுவனத்தின் பெயரில் போலியாக சான்றிதழ்களை விநியோகித்ததாக விரிவுரையாளர் சூரியநாராயணனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் என்ற முதலுதவி பயிற்சி நிறுவனம், தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் விதிகளை மீறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் விரிவுரையாளர் சூரியநாராயணன் சில ஆண்டுகளுக்குமுன் நிறுவனத்திலிருந்து வெளியில் சென்றுவிட்டார். பின்னரும், தான் தொடர்ந்து செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்காக அவர் அந்த நிறுவனங்களிடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுள்ளார். மேலும், பயிற்சி பெற்ற ஒவ்வொருவரிடமிருந்தும் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக பெற்றுள்ளார். 

மேலும் சூரியநாராயணன் போலியான இணையதளங்களை உருவாக்கி சென்னை மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளை அணுகியுள்ளார். அவர்களிடம் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பின் அங்கீகாரம் பெற்று அதன் பிரிவு அலுவலகத்தை சென்னை மயிலாப்பூரில் நடத்தி வருவதாகவும் தான் அங்கீகாரம் பெற்ற விரிவுரையாளர் என்றும் கூறி சட்ட விரோதமாக பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

சூரியநாராயணன்

இந்த நிலையில், சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் மனித வள பிரிவு தலைமை அதிகாரி சிவம் குமார் கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதியன்று போலீஸாரிடம் சூரியநாராயணன் மீது ஒரு புகார் மனு அளித்தார். அதில், ``சூரியநாராயணன் தொலைபேசியிலும், இ-மெயிலிலும் பலமுறை தொடர்புகொண்டார். தன்னை செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பின் அங்கீகாரம் பெற்ற விரிவுரையாளர் என்று கூறினார். அதை நம்பிய நாங்கள் தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை வகுப்புகள் நடத்த அனுமதித்தோம்.

பயிற்சி முடிந்தபிறகு  தற்காலிக சான்றிதழ்களையும் மற்றும் தேசிய தலைமையகத்திலிருந்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் பெற்றுத் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார். அதன்பேரில் அவருக்கு ரூ.12,250 செலுத்தினேன். ஓரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்கப்படாததால் சூரியநாராயணன் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுகுறித்து ஆய்வு செய்தபோது அவர் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்பது தெரியவந்தது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியிருந்தார். செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் சார்பிலும் சென்னை போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலி ஆவணங்கள் மூலம் மெகா மோசடி நடந்திருப்பது தெரியவந்ததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி கூடுதல் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி, ஐஜி ஸ்ரீதர் ஆகியோர் மேற்பார்வையில் சி.பி.சி.ஐ.டி மெட்ரோ பிரிவு போலீஸார் 
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சூரியநாராயணன் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது 420 (ஏமாற்றுதல்), போலி ஆவணம் தயாரித்தல் (468), ஆள் மாறாட்டம் (471) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சூரியநாராயணன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பயிற்சி பெறுபவர்களுக்கு அளிப்பதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்களை தயார் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்தச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்த போலீஸார்,  இதுவரை எந்தெந்த நிறுவனங்களில் அவர் பயிற்சியளித்துள்ளார் என்ற விவரங்களை தற்போது சேகரித்து வருகின்றனர்.
 

முதலுதவி பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் மோசடி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனம், 1915-ல் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 119 கிளைகள் உள்ளன. இலவசமாக முதலுதவி பயிற்சி அளிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். சுனாமி உட்பட இயற்கை இடர்பாடுகளின்போது முதலுதவி சிகிச்சை பெற்றவர்கள் மூலம் உதவி செய்வதை இந்த நிறுவனம் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சூரியநாராயணன், மருத்துவர் கையெழுத்தை தானே போட்டு போர்ஜரி செய்துள்ளார். 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய்க்கு சான்றிதழ்களை விற்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் தமிழகப் பிரிவில் இணைந்து சூரியநாராயணன் செயல்பட்டுள்ளார். மோசடியில் தன்னுடைய கூட்டாளிகளையும் சேர்த்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேர்மனை கொலை செய்ய முயன்ற வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரியநாராயணனின் பயிற்சி அளிக்கும் சான்றிதழ், பிப்ரவரி 2018-ல் முடிவடைந்துவிட்டது.. அதன்பிறகும் ஆள்மாறாட்டம் செய்து முதலுதவி பயிற்சிகளைக் கொடுத்துள்ளார். அவரின் கூட்டாளிகளைத் தேடிவருகிறோம்" என்றனர்.