``நிறைய கஷ்டங்களை அனுபவிச்ச பிறகுதான் ஐயப்பனைத் தரிசிக்க முடிஞ்சது'' - திருநங்கைகள்! | transgender Rj Ananya shares her experience about sabarimalai ayyappan visit

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (21/12/2018)

கடைசி தொடர்பு:15:12 (21/12/2018)

``நிறைய கஷ்டங்களை அனுபவிச்ச பிறகுதான் ஐயப்பனைத் தரிசிக்க முடிஞ்சது'' - திருநங்கைகள்!

பரிமலை கோயிலுக்குப் பெண்கள் போகலாமா.. கூடாதா.. என்கிற சர்ச்சை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இப்படியிருக்கிற சூழலில் பலருடைய எதிர்ப்பை மீறி கேரளாவைச் சேர்ந்த திருநங்கைகள் சபரிமலைக் கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வந்திருக்கிறார்கள். கேரளாவிலுள்ள கொச்சியைச் சேர்ந்த அனன்யா, ரெஞ்சுமோல், அவந்திகா, திருப்தி ஷெட்டி மூவரும் திருநங்கைகள். இவர்கள் மூவரும்தாம் சமீபத்தில் ஐயப்பனை தரிசித்துவிட்டு வந்தவர்கள். அதில் முதல் ஆர்.ஜே என்கிற பெருமையைப் பெற்ற திருநங்கை அனன்யாவிடம் பேசினோம்.

திருநங்கை அனன்யா

``என்னுடைய சொந்த ஊர் கேரளாவிலுள்ள கொல்லம். நான் வளர, வளர என் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். திருநங்கையாக மாறியவுடன் எங்க வீட்டுல கடுமையான எதிர்ப்பு கிளம்பிச்சு. என்னால ஆண் மாதிரி வாழ முடியாதுன்னு எடுத்துச் சொல்லியும் அவங்க புரிஞ்சிக்கலை. வேற வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாகிடுச்சு. அம்மாவும், அப்பாவும் கைவிட்டதும் எங்கே போகுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்புறம்தான் என்னை மாதிரி வீட்டுல உள்ளவங்களால புறக்கணிக்கப்பட்டு இருக்கிறவர்களை சந்திச்சேன். அவங்க கூட சேர்ந்தேன். அங்கேதான் திருப்தி அம்மா, ரெஞ்சு அம்மா, அவந்திகா எனக்கு பழக்கமானாங்க. நாங்க அம்மா - பொண்ணு மாதிரிதான் இருப்போம். அவங்ககிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னைப் புறக்கணிச்ச சமூகம் முன்னாடி வாழணும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி கடினமா உழைச்சு முதல் திருநங்கை ஆர்ஜேங்குற பட்டத்தை வாங்கினேன்'' எனப் புன்னகைத்தவரிடம் சபரிமலை குறித்து கேட்டேன்.

``நான் சபரிமலைக்குப் போகிறது இதுதான் முதன் முறை. ஆரம்பத்துல சபரிமலைக்குப் போய் ஐயப்பனைப் பார்க்கணுங்குற ஆசை அதிகமா இருந்துச்சு. இங்கே பெண்கள் நுழையக் கூடாதுன்னு பிரச்னை நடந்துட்டு இருக்கிறப்போ இது தேவையான்னு ஒரு பக்கம் தோணுச்சு, இன்னொரு பக்கம் என்ன ஆனாலும் ஐயப்பனைப் பார்த்துட்டு வந்துடலாம்னும் தோணுச்சு. நானும், அவந்திகாவும் முதன் முறையா சபரிமலைக்குப் போறோம். ரெஞ்சும்மாவும், திருப்திம்மாவும் ஏற்கெனவே போயிருக்காங்க. ஆனா, அதுவரை அவங்க ஆண் என்ற அடையாளத்தோடதான் போயிருக்காங்க. இப்போ நாங்க எல்லோரும் திருநங்கைங்குற அடையாளத்தோட தரிசனம் பண்ண கிளம்பினோம்.

திருநங்கைகள்

போகிறதுக்கு முன்னாடி போலீஸ் ஸ்டேஷனில் எல்லா உதவியையும் கேட்டுட்டுதான் கிளம்புனோம். கடந்த 15 ம் தேதி சபரிமலைக்குக் கிளம்பினோம். அப்போது எங்க கூட கொச்சினில்லிருந்து போலீஸ்காரங்க வந்திருந்தாங்க. இடையில் எருமேலி (Erumeli) ஸ்டேஷனில் நிறைய பிரச்னைகள் நடந்துச்சு. போலீஸ்காரங்க அவமானப்படுத்தினாங்க. நிறைய தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்துச்சு. ஊடகத்தின் உதவியினால எல்லா தடைகளையும் தகர்த்துட்டு சபரிமலை ஏறினோம். கண் குளிர ஐயப்பனை தரிசனம் பண்ணினோம். அந்த நொடி பரவசத்தை இப்பவும் எங்களால உணர முடியுது.

நாங்க கோயிலுக்குப் போய்ட்டு வந்ததும் எங்க சமூகத்துல உள்ளவங்களே ஃபேமஸ்காகத்தானே இதைப் பண்ணீங்கன்னு கேட்குறாங்க. முதல் திருநங்கை ஆர்ஜேன்னு நான் ஆல்ரெடி ஃபேமஸ் தாங்க! இப்போ எங்களைப் பார்த்துட்டு நிறைய திருநங்கைகள் சகோதரிகள் கோயிலுக்குப் போக ஆசைப்படுறாங்க. எல்லோருக்கும் நாங்க ரோல் மாடலா இருப்போம்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ரொம்ப ஹாப்பியா இருக்கு'' என்றவர் ``தமிழகத்திலிருந்து பெண்கள் யார் வந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்!'' என்று நிறைவாகச் சொல்லி முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்