வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:18 (21/12/2018)

“5 ஆண்டுகளில் 1500 கோடிக்கும் மேல் ஊழல்” - அறப்போர் இயக்கம் ஜெயராம்

கொங்கு மண்டலப் பகுதிகளைச் சார்ந்த ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகின்றன, அதுவும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சாதிக்குத்தான் முன்னுரிமை” எனக் குற்றம்சாட்டியிருந்தனர்.

“5 ஆண்டுகளில் 1500 கோடிக்கும் மேல் ஊழல்” - அறப்போர் இயக்கம் ஜெயராம்

சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு வருடாந்திர ஒப்பந்தங்களின் மூலம் பணிகளுக்கான டெண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், சமீபகாலங்களில் பேக்கேஜ் டெண்டர் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி, பல சிறிய பணிகளை ஒன்று சேர்த்து பல கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ஒரே டெண்டராக்கி, ஒரு சிலருக்கே வழங்கி வருவதாக ஒப்பந்ததாரர்கள் சிலர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அறப்போர் இயக்கம் ஜெயராம் மாநகராட்சி ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பேக்கேஜ் டெண்டர் முறையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி ஆணையரிடம் இதுவரை வழங்கப்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் புகார் மனுக்களை அளித்தனர். அப்போது சில ஒப்பந்ததாரர்களிடம் பேசியபோது ``பேக்கேஜ் டெண்டர் முறையால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த டெண்டர் நடைமுறையில் ஏற்கெனவே பல முறைகேடுகளும் நடந்துள்ளன. டெண்டர் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரே கணிப்பொறியிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. டெண்டர்கள் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துத்தான் வழங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகின்றன, அதுவும் அங்குள்ள ஒரு குறிப்பிட்ட சாதிக்குத்தான் முன்னுரிமை” எனக் குற்றம்சாட்டியிருந்தனர்.

அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஜெயராம் சமீபத்தில் மாநகராட்சி ஒப்பந்தங்களில் 740 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஜெயராம்``மாநகராட்சியின் உள்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் எந்த மாதிரியான முறைகேடுகள் நடந்துள்ளன?"

``முதலில் இந்த ஒப்பந்தம் பற்றியான அறிவிப்புகள் ஆகஸ்ட் 9-ம் தேதி செய்தித்தாள்களில் வெளியாகின. அதில் ஒப்பந்தங்கள் பற்றியான எந்தத் தகவல்களும் இடம் பெற்றிருக்கவில்லை. அடுத்த அறிவிப்பானது, ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியானது. அதில்தான் முழுமையான டெண்டர் மதிப்புகள் அடங்கியிருந்தன. அரசின் நடைமுறைப்படி 2 கோடி ரூபாய்க்கு அதிகமான எந்த ஒப்பந்தங்களும் செய்தித்தாள்களில் வெளியாகி, ஒரு மாதம் ஒப்பந்தங்கள் கொடுப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சி ஒப்பந்தங்கள் அறிவிப்புகள் வெளியாகி 15 நாள்களிலேயே வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மழைநீர் வடிகாலுக்கு பதில், புதிய வடிகால் அமைக்க என ஒப்பந்தம் எடுக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள வடிகால்களை உடைத்து புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன."

``இந்த ஒப்பந்தங்களின் வாயிலாக அரசின் வரிப்பணத்தில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது?"

``இதற்கு முன்னால் 40 எம்.எம் ரோடு அமைப்பதற்கான 2,800 ரூபாய் செலவு செய்தார்கள் என்றால், இப்போது வழங்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்களில் அதே அளவு சாலை அமைக்க 6,000 ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. செலவிடப்பட்ட பணத்தில் பாதிக்குப் பாதி மக்களின் வரிப்பணம்தான் வீணாக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சாலை மழைநீர் வடிகால் அமைக்க 5,000-ம் கோடி ரூபாய்க்குச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதில், 1500 கோடி ரூபாய்க்கு மேல் இது மாதிரியான கூட்டுச் சதிகளால் நாம் இழந்துள்ளோம்."

``மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் அமைச்சரின் செயல்பாடுகள் என்ன?"

``சென்னை மற்றும் கோவை மாநகராட்சிப் பணிகளுக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்கள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பர்களான கே.சி.பி., வரதன் இன்ப்ரா மற்றும் கான்ஸ்திராநிக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சென்னையில் மட்டும் 36 டெண்டர்களை 70 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி, இந்த மூன்று ஒப்பந்தங்களும் ஒரே ஐ.பி முகவரிகொண்ட கணினியில் இருந்துதான் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன."

``இந்த முறைகேடுகளின் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கோரிக்கையாக உள்ளது?"

``பேருந்து வழிச் சாலைகள், உட்புறச் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக வழங்கப்பட்ட டெண்டர்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதேபோல் இந்த முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் அதிகாரிகள்மீது துறைவாரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்."


டிரெண்டிங் @ விகடன்