வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (21/12/2018)

கடைசி தொடர்பு:16:49 (21/12/2018)

`ஈடு செய்ய முடியா இழப்பு!' - பிரபஞ்சன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபஞ்சன்

எழுத்து உலகில் முடிசூடா மன்னாக விளங்கியவர் பிரபஞ்சன். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகங்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கியுள்ளார். தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டு பயணித்தவர் பிரபஞ்சன். தனது இறுதி மூச்சுவரை புத்தக வாசிப்பை தொடர்ந்துகொண்டேயிருந்தார். அவர் தனது கடைசிகாலங்களில்கூட புத்தக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு அயராது பயணித்தவர். உடல்நலக்குறைவு காரணமாகப் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தவர், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபஞ்சன் மறைவு தொடர்பாக மு.க.ஸ்டாலின், ``சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பிரபஞ்சன்

திராவிட இயக்கத்தை நட்பு முரணுடன் அணுகிய எழுத்தாளர் பிரபஞ்சன், அரசியல் ரீதியாக சில விமர்சனைங்களை முன்வைத்தபோதும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரிடம் தனிப்பட்ட அன்பு கொண்டவர் ஆவார். ஓர் இலக்கியவாதியான தன்னிடம் கலைஞர் வெளிப்படுத்திய அன்பை பல மேடைகளில் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார். மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, ``தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமிக்க படைப்பாளரான பிரபஞ்சனின் மறைவுச் செய்தி அறிந்து மனவேதனை அடைந்தோம். இது தமிழிலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும். கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்ற பிரபஞ்சன், பழந்தமிழ் இலக்கியங்களிலும், நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த பரிச்சயமுடையவர்.

திமுக இரங்கல்

தனது இலக்கிய ஆற்றலை மனிதகுல மேம்பாட்டுக்குப் பயன்படுத்தியவர். ‘நேற்று மனிதர்கள்’ என்ற சிறுகதையின் மூலம் ஆணவப் படுகொலை செய்யும் வக்கிர உள்ளங்களை வன்மையாகக் கண்டித்தவர். லட்சக்கணக்கான வாசகர்களின் பற்றுக்குரிய பிரபஞ்சன், புற்று நோயால் தனது இறுதிக் காலத்தில் துன்புற்றுள்ளது வேதனைக்குரியது. மாபெரும் மனிதநேயர், மகத்தான படைப்பாளி, எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

டி.டி.வி தினகரன், ``சாகித்ய அகாடமி  உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று, எழுத்துப் பணியைத் திறம்பட செய்துவந்த பிரபஞ்சனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்குப் பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்!'' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வைரமுத்து, ``பிரபஞ்சன் ஒரு சமரசமில்லாத படைப்பாளி'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ``தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சிய எழுத்தாளர் தோழர் பிரபஞ்சன். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரை அனைத்திலும் தடம் பதித்தவர். வானம் வசப்படும் எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்'' என்று இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``வானம் வசப்பட்ட திரு.பிரபஞ்சனுக்கு பூமி வசதிப்படாததால் காலமானார். அவர் எழுத்துகள் எப்போதும் நம்முடன். நன்றி சொல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.