`நல்ல காரியங்கள் செய்யும்போது இடர்ப்பாடுகள் வரும்!' - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் | Minister udumalai radhakrishnan words about farmers protest

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:50 (21/12/2018)

`நல்ல காரியங்கள் செய்யும்போது இடர்ப்பாடுகள் வரும்!' - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

 உடுமலை ராதாகிருஷ்ணன்

``நல்ல காரியங்களை செய்யும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்'' என திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப்பொருள்கள் குறித்த விழிப்புஉணர்வு கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், ``ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புஉணர்வை ஏற்படுத்தி, திருப்பூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றிக் காட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை மின்சாரத்துறை அமைச்சரிடம் நானே அழைத்துச் சென்று பேச வைத்திருக்கிறேன். அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றை எல்லாம் செய்துகொடுக்க தயாராகவே இருப்பதாகவும், பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உண்டான இழப்பீடு தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதுதான் ஏன் என்று தெரியவில்லை. நல்ல காரியங்கள் செய்யும்போது ஏற்படும் ஒருசில இடர்ப்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். இது விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசு. எனவே நாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை'' என்று தெரிவித்தார்.