`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது!’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை | Madurai HC bench orders status quo Sterlite plant case

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:29 (21/12/2018)

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது!’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக அந்த ஆலை நிர்வாகம் சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆலையை மூட தமிழக அரசு கூறிய காரணங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்து கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலை திறக்கக் கூடாதென்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை மீண்டும் தொடங்கியுள்ளன. பசுமைத் தீர்ப்பாய உத்தரவு குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத், ஆலையைத் திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும், 2 மாதங்களில் ஆலை திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

ஸ்டெர்லைட் ஆலை

இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவை சேர்ந்த பாத்திமா பாபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு வெளிவருவதற்கு முன்பாகவே தீர்ப்பு நகல் வேதாந்தா நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டது. கடந்த 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு தீர்ப்பாய உத்தரவு நகல் வெளிவந்த நிலையில், அதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். தீர்ப்பாயம் அறிவிக்கும் முன்னரே வெளியாகும் உத்தரவு செல்லாது என வழிகாட்டுதல் இருப்பதாகவும் பாத்திமா பாபு, தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த வழக்கை இன்று மதியம் விசாரித்த நீதிபதிகள், ``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தாந்தா நிறுவனம் ஈடுபடக்கூடாது. நீதிமன்றம் உத்தரவிடும் வரை தற்போதைய நிலைதான் தொடர வேண்டும். இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்த விசாரணையை  ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசு அன்றைய தினம் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க