`காதலித்தோம், விலகிவிட்டாள்!’ - 17 வயது சிறுமியைக் கழுத்தறுத்துக்கொன்ற காதலன் வாக்குமூலம் | a girl was brutally killed by her lover in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (21/12/2018)

கடைசி தொடர்பு:18:08 (21/12/2018)

`காதலித்தோம், விலகிவிட்டாள்!’ - 17 வயது சிறுமியைக் கழுத்தறுத்துக்கொன்ற காதலன் வாக்குமூலம்

நெல்லை மாவட்டத்தில், காதலித்த பெண்ணை அவரின் காதலனே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட காதலி

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே சேரகுளம் செல்லும் சாலையில் செயல்படாத கெமிக்கல் கம்பெனி உள்ளது. அந்த வளாகத்தில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக மூலைக்கரைப்பட்டி போலீஸாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதனால் நாங்குநேரி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

அங்கு சடலமாகக் கிடந்தவர் யார் என்பது தெரியாத நிலையில், அவரின் கைகள் பின்புறம் கட்டப்பட்டு இருந்தது. அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தார். இது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நெல்லை பேட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த மதார் மைதீன் என்பவர் தன் மகள் ஆஷிகா பர்வீன் என்ற 17 வயது சிறுமியைக் காணவில்லை எனப் புகார் தெரிவித்து இருந்தது தெரியவந்தது. 

10-ம் வகுப்பு படித்துவிட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்று வந்த ஆஷிகா பர்வீன், நேற்று வழக்கம்போல் கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. அவரது போன் தொடர்ந்து அடித்தபோதிலும் செல்போனை யாருமே எடுத்துப் பேசவில்லை. அதனால் அவரின் தந்தை புகார் செய்தார்.

ஆஷிகா பர்வீன்​​​

 

ஆஷிகா பர்வீனின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை எடுத்து போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதனால் அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது போன் அணைக்கப்பட்டு இருந்தது. அவர் வீட்டுக்கும் செல்லாமல் தலைமறைவாகி இருந்தார். அதனால் போலீஸார் அவரைத் தேடினார்கள்.

இந்த நிலையில், தங்கள் வீட்டில் பதுங்கி இருந்த அவரை உறவினர்களே போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஆஷிகா பர்வீனுடன் கடந்த 6 மாதமாகக் காதலித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் விலகிச் சென்றதுடன் பெற்றோர் பார்த்த மணமகனைத் திருமணம் செய்ய முடிவு செய்ததால் அவரைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இருப்பினும் கொலையை அவர் மட்டுமே செய்தாரா அல்லது நண்பர்களின் துணையுடன் இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டாரா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.