மின் கட்டணம் பாக்கியால் பி.எஸ்.என்.எல் டவர்களுக்கான மின் இணைப்பு துண்டிப்பு! - குமரி மக்கள் அவதி | EB disconnects electricity connections to BSNL towers in Kanyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (21/12/2018)

மின் கட்டணம் பாக்கியால் பி.எஸ்.என்.எல் டவர்களுக்கான மின் இணைப்பு துண்டிப்பு! - குமரி மக்கள் அவதி

மின் கட்டணம் செலுத்தாததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் டவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல். டவர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் இன்கம்மிங் கால்களுக்காக மாதம்தோறும் குறைந்த அளவு கட்டணத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்துள்ளது. இதனால் பலர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நெட்வொர்க் கிடைக்காமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிலும் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, மண்டைக்காடு, குளச்சல் என சுமார் 50 பகுதிகளில் பி.எஸ்.என்.எல் சுத்தமாக நெட்வொர்க் இல்லை. இந்தப் பகுதியில் உள்ள டவர்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் என்னதான் பிரச்னை என விசாரித்தோம்.

raju

பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் சங்க அமைப்பாளர் ராஜு கூறுகையில், ``நாகர்கோவில் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு வட்டத்தில் 270 டவர்கள் உள்ளன. டவர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகங்களுக்கு என மொத்தம் 275 மின் இணைப்புகள் உள்ளன. மின்சார கட்டணம் செலுத்தாததால் கடந்த 15 நாள்களாக பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் மற்றும் டவர்களுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்தி டவர்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி, மண்டைக்காடு, என்.ஜி.ஓ காலனி, குளச்சல், ஈத்தாமொழி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பி.எஸ்.என்.எல் டவர்கள் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் தொலைத்தொடர்பு வட்டத்தில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சுமார் ஒரு கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும்.

பி.எஸ்.என்.எல். office

பி.எஸ்.என்.எல் மத்திய அலுவலகம் குறைந்த அளவு நிதி ஒதுக்கியுள்ளதும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வருவாய் குறைந்துள்ளதாலும் மின் கட்டணம் செலுத்தமுடியாத அளவுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய பி.எஸ்.என்.எல் நிறுவனம் 12,000 கோடி ரூபாய் வங்கியில் கடன் கேட்க முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல் கடன் வாங்குவதற்குத் தொலைத்தொடர்புத்துறை எல்.ஓ.சி கடிதம் வழங்காததால் அதிக வட்டிக்குப் பணம் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் அனைத்து நிறுவனங்களும் கடனில்தான் இயங்குகிறது. பி.எஸ் என்.எல் நிறுவனம் மட்டும்தான் சொந்த பணத்தில் இயங்குகிறது. மத்திய அரசு சேவைகளுக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 2,400 கோடி ரூபாயை மத்திய அரசு தர வேண்டும்.

பி.எஸ்.என்.எல்.

கேரள மாநிலத்திலும் இதுபோன்ற நிலை உள்ளது. கேரள அரசு மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருக்கிறார்கள். அதுபோல தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்க வேண்டும். நாகர்கோவில் தொலைத்தொடர்புத் துறை லாபத்தில் இயங்குகிறது. மின்சாரக் கட்டணம் இரண்டுமாதத்துக்கு 40,000 ரூபாய் வரும். ஆனால், ஜெனரேட்டர் இயக்க 10 நாள்களுக்கு 60,000 ரூபாய்க்கான டீசல் செலவாகிறது" என்றார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தையும் வாடிக்கையாளர்களையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்.