ஜே.சி.பி வைத்து யானைகளைத் துன்புறுத்தும் செங்கல் சூளை நிர்வாகம் - கோவையில் அதிர்ச்சி! | Bricks champer chase wild elephants in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (21/12/2018)

கடைசி தொடர்பு:20:49 (21/12/2018)

ஜே.சி.பி வைத்து யானைகளைத் துன்புறுத்தும் செங்கல் சூளை நிர்வாகம் - கோவையில் அதிர்ச்சி!

கோவை தடாகம் அருகே யானைகளை, செங்கல் சூளை அதிபர்கள் ஜே.சி.பி வைத்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.சி.பி இயந்திரம் மூலம் விரட்டப்படும் யானைகள்

கோவை தடாகம், மாங்கரை, பெரியதடாகம், சின்னதடாகம், ஆனைக்கட்டி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி விநாயகன் என்ற காட்டு யானை கடந்த சில நாள்களுக்கு முன்பு முதுமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அரசாங்க விதியை கடைப்பிடிக்காமல் பல நூறு அடிக்குக் குழிதோண்டி மண் எடுக்கும் செங்கல் சூளைகள், யானை வழித்தடங்களில் இருக்கும் கட்டடங்கள் என்று யானைகளுக்கு ஏராளமான நெருக்கடிகளைக் கொடுத்துவிட்டு, அவற்றை இடமாற்றம் செய்வது இந்தப் பிரச்னைக்குத் தீர்வைக் கொடுக்காது என்று சூழலியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தடாகம் பகுதி அருகே நேற்று 8 யானைகள் கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தன. அப்போது, செங்கல் சூளைகளுக்காக மண் எடுத்துக்கொண்டிருந்த ஜே.சி.பி ஒன்று யானைகளைத் துரத்தியுள்ளது. குறிப்பாக, இதில் ஓர் யானையின் மீது ஜே.சி.பி மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“விவசாயிகள் கோரிக்கையால் விநாயகன் யானை இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், யானை வழித்தடங்களில் சென்றே யானைகளுக்குத் தொடர்ந்து தொந்தரவுகளைக் கொடுக்கும் இந்தக் கனிமவளக் கொள்ளையர்களைத் தண்டிப்பது யார்?” என்று சூழலியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜே.சி.பி இயந்திரம் மூலம் விரட்டப்படும் யானைகள்

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, “யானைகளை விரட்டியது சூளைக்காரர்கள் இல்லை. அங்கு, ஜீப் செல்ல முடியாததால் வனத்துறை ஊழியர்கள்தான் ஜே.சி.பி உதவியுடன் யானைகளை விரட்டினர். அப்போது, யானைகள் வண்டியை சேஸ் செய்துள்ளது. அதனால்தான், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வரை யானைகளை வனத்துறை ஊழியர்கள் விரட்டியுள்ளனர்” என்றார்.