ரூ.500-க்கு ஆசைப்பட்டு மதுபானம் கடத்திய கல்லூரி மாணவிகள்! - நாகை அருகே கைது | Police arrests college students near nagappattinam for illegal liquor smuggling

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (21/12/2018)

கடைசி தொடர்பு:21:04 (21/12/2018)

ரூ.500-க்கு ஆசைப்பட்டு மதுபானம் கடத்திய கல்லூரி மாணவிகள்! - நாகை அருகே கைது

பேருந்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த, கல்லூரி மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது, நாகை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவிகள்

காரைக்காலில் இருந்து வந்த பேருந்தை, நண்டலாறு சோதனைச்சாவடி அருகே இன்று மதியம் மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி சுவாமிநாதன் உத்தரவின் பேரில் பொறையாறு காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பயணம் செய்த, மாணவிகள் இருவர் கொண்டுவந்த, புத்தகப் பேக்கைத் திறந்து பார்த்தபோது, மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுபற்றி போலீஸாரிடம் பேசியபோது, ``சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த ரித்திகா மற்றும் ராதாநல்லூரைச் சேர்ந்த தேவி ஆகிய இருவரும் சீர்காழியில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்கள். இதில், ரித்திகாவின் தாயார் பரமேஸ்வரி தொடுவாய் கிராமத்தில் கள்ளச்சாராயத் தொழிலில் இருப்பவர். போலீஸாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, கல்லூரியில் படிக்கும் சொந்த மகளையே மது கடத்தலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்

ரித்திகா தன் தோழி தேவியுடன் தொடர்ந்து பேருந்தில் மது கடத்தி வந்திருக்கிறார். இன்று இருவரும் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து 210 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இனற்றைக் கொண்டுபோய் தொடுவாய் கிராமத்தில் பரமேஸ்வரியிடம் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 செலவுக்குத் தருவாராம். இந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டு, அவர்கள் இருவரும் மதுக் கடத்தலில் கொண்டுள்ளனர். மது கடத்துவதை ஒரு ஜாலியாகவே செய்திருக்கிறார்கள். கைதாகி சிறையிலடைக்கப் போவதை எண்ணி கத்தினார்கள், கதறினார்கள். இதுபோல சட்டவிரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்குப் பாடமாக இருக்கட்டும்' என்பதற்காகவே சிறையில் அடைத்தோம். கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்தப் பெண்மணி, தன் மகளையும் மகள் மூலம் அவர் தோழியையும் இத்தொழிலில் ஈடுபட வைத்திருப்பது மிகவும் கொடுமையானது" என்றனர்.