`பா.ஜ.க-வை அசால்ட்டாக நினைக்காதீர்கள்!’ - பிறந்தநாளில் தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் அட்வைஸ் | Congress - DMK will win 40 MP seats, says EVKS Ilangovan in erode

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (21/12/2018)

கடைசி தொடர்பு:21:30 (21/12/2018)

`பா.ஜ.க-வை அசால்ட்டாக நினைக்காதீர்கள்!’ - பிறந்தநாளில் தொண்டர்களுக்கு ஈ.வி.கே.எஸ் அட்வைஸ்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள் விழா

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் 71-வது பிறந்தநாள் விழா ஈரோட்டில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 71-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் 71 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக்கை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெட்டினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென ஈரோடு காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஏற்பாடுகளைக் கனஜோராகச் செய்தனர். அந்த வகையில், இன்றைக்கு சாலை நெடுகிலும் பிரமாண்டமான பேனர்கள், கொடிகள் என ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள் ஈரோட்டையே அதகளப்படுத்தினர். (கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அந்தப் பேனர்கள் அகற்றப்பட்டது தனிக்கதை). மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காகக் கோயில்களில் சிறப்பு பூஜை, மசூதிகளில் சிறப்புத் தொழுகை, தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனையும் செய்தனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள் விழா

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிறந்தநாள் விழா கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசியச் செயலாளர் சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, மற்றும் தி.மு.க மாநிலத் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி போன்ற பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஈ.வி கே.எஸ் ஆதரவாளர்கள் கார், வேன்களில் வந்து கூட்டம் நடந்த மண்டபத்தைத் திணறடித்தனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 71-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், 71 கிலோ பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. மிகவும் உற்சாகத்துடன் ஈ.வி.கே.எஸ் அந்தக் கேக்கை வெட்ட, ஆதரவாளர்களின் கைதட்டலும், விசில் சத்தமும் காதைப் பிளந்தது. வழக்கத்தை விட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடனேயே இருந்தார்.

`நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இளமையாகவே தெரிகிறார்’ என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசியச் செயலாளர் சஞ்சய்தத்தும், ‘என்னைவிட 3 மாதம் இளங்கோவன் இளையவர்’ எனத் தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமியும் சொல்ல ஈ.வி.கே.எஸ் முகத்தில் சிரிப்போடு வெட்கமும் பளிச்சென தெரிந்தது. நிகழ்ச்சியில் பேசிய பலரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் குடும்ப பாரம்பர்யத்தையும் அவரது துணிச்சலையும் சுட்டிக்காட்டிப் பேசினர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்தநாள் விழா

நிகழ்ச்சியின் இறுதியாக மைக் பிடித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ``நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க-வுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. சின்ன தோல்வி பெரிய தோல்வி எனக் கொஞ்சம்கூட வெட்கம் சூடு சுரணை இல்லாமல் பா.ஜ.க-வினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழக பா.ஜ.க-வின் ஊதுகுழலான தமிழிசை, ‘இது வெற்றிகரமான தோல்வி’ என்று சொல்கிறார். என்ன ஒரு வார்த்தை ஜாலம். உங்களைவிட எங்களுக்கு வார்த்தை ஜாலம் நன்றாகத் தெரியும்.

இன்றைக்கு ராகுல் தலைமையில் இளைஞர்கள் சாரை சாரையாகக் காங்கிரஸில் இணைகின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. 3 மாநிலங்களில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டோம், பா.ஜ.க தோற்றுவிட்டது என நாம் அசால்ட்டாக இருந்துவிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள், பணத்தை வாரி இறைப்பார்கள், விதவிதமான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையெல்லாம் அளிப்பார்கள். எனவே, மோடி என்கிற பயங்கரவாதியை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற வேண்டும்’’ என்றார்.