ராமநாதபுரம் ஏ.டி.எம் பணம் கொள்ளை விவகாரம்! - முன்னாள் ராணுவ வீரர் உள்பட மேலும் இருவர் கைது | police arrested 2 more persons in Ramnad ATM stealing case

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (21/12/2018)

ராமநாதபுரம் ஏ.டி.எம் பணம் கொள்ளை விவகாரம்! - முன்னாள் ராணுவ வீரர் உள்பட மேலும் இருவர் கைது

ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து ரூ.1.85 கோடி  திருட்டு விவகாரத்தில் முன்னாள் ஊழியருடன் சேர்ந்து  தனியார் நிறுவன ஊழியர்களே பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஏ.டி.எம். பணம் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  ஏடிஎம் இயந்திரங்களில்   பணம் வைப்பதற்காக ரூ ராமநாதபுரம் ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.1.85 கோடி மற்றும்  எச்.டி.எஃப்.சி வங்கியில் இருந்து ரூ.26 லட்சம் எடுத்துக் கொண்டு தனியார் பாதுகாப்பு நிறுவன வாகனம் நேற்று மாலை கிளம்பியது. ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி பகுதிகளில் உள்ள  ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.22 லட்சத்தை நிரப்பி விட்டு, எஞ்சிய பணத்துடன் அந்த வாகனம் சாயல்குடி வழியாக முதுகுளத்தூர் சென்றது. கடலாடி மலட்டாறு விலக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனம்  கட்டுப்பாட்டை இழந்து அன்றிரவு 10 மணியளவில் விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த ரூ.1.85 கோடி மாயமானதாக பணத்தைக் கொண்டுச் சென்ற ஊழியர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  காணாமல்போன பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் வாகனத்தினை சோதனையிட்ட போது வேனில் இருந்த பை ஒன்றில்  இருந்து ரூ.8,50,500-ஐக் கைப்பற்றினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் வேன் கவிழ்ந்ததில் லேசான காயமடைந்த ஊழியர்கள் 4 பேரிடம்  தனித்தனியாக விசாரித்தனர்.  விசாரணையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தார். இதன் மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணையில் மாயமானதாக கூறிய பணத்தை மேலும் இருவருடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.32.71 லட்சத்தை  போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளை

ஏ.டி.எம்.இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட  2 கோடியே 11 லட்ச ரூபாயில் ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்-களில் ரூ 22 லட்சம் நிரப்பியுள்ளனர். இதன் பின் முதுகுளத்தூருக்கு சென்ற சென்ற இவர்கள் வேன் விபத்தில் சிக்கியதாகவும், வேனில் இருந்த பணத்தினை காணவில்லை எனவும் நாடகமாடியுள்ளனர். மேலும் பணம் நிரப்பும் தனியார் நிறுவனமான சிஸ்கோ ஏஜன்ஸியில் பணியாற்றிய கந்தபாண்டி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த யோகேஷ் ஆகியோரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிஸ்கோ நிறுவனத்தின்  பணம் நிரப்பும் ஊழியர்களான திருவாடானை அன்பு  இளையான்குடி குரு பாண்டியன் , வேன் டிரைவர் கபிலன் ,முன்னாள் ராணுவ வீரரும், தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரியுமான வீரபாண்டியன், பணம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய தனியார் நிறுவன முன்னாள் ஊழியரான பரமக்குடியைச் சேர்ந்த கந்தபாண்டி, ராமநாதபுரம் யோகேஷ்  ஆகியோர் மீது தணிக்கை அறிக்கை அடிப்படையில் புகார் பெற்று வழக்கு பதிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.