‘விவசாயிகளுக்கு ஆதரவாக உழவர் சந்தையில் வேலை நிறுத்தம்’- 500 டன் காய்கறிகள் தேக்கம் | Farmers protest at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (22/12/2018)

கடைசி தொடர்பு:00:45 (22/12/2018)

‘விவசாயிகளுக்கு ஆதரவாக உழவர் சந்தையில் வேலை நிறுத்தம்’- 500 டன் காய்கறிகள் தேக்கம்

திருப்பூரில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட உழவர் சந்தையில் நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றதால் சுமார் 500 டன் அளவுக்கு காய்கறிகள் தேக்கமடைந்திருக்கிறது.

திருப்பூர்

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் திருப்பூர் கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக்கூறி விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கேயம் என அனைத்துப் பகுதி உழவர் சந்தைகளிலும் சேர்த்து மொத்தம் ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த அனைத்துக் கடைகளும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளன. இதனால் நேற்றைய தினம் மட்டும் சுமார் 500 டன் அளவுக்கு மாவட்டம் முழுவதும் காய்கறிகள் தேக்கம் அடைந்திருக்கிறது. அதன்மூலம் மாவட்டம் முழுவதும் சுமார் 30 லட்சம் வரையிலான உழவர் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த உழவர் சந்தை வேலை நிறுத்தத்தால் சிறிய காய்கறி கடைகள், சாலையோர காய்கறி வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டபோதும், மத்திய அரசின் உயர்மின் அழுத்த கோபுர திட்டத்துக்கு தங்களின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி என்றே உழவர் சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.