தவறிவிழுந்த மாணவன்... கவனிக்காத பள்ளிப் பேருந்து டிரைவர்... நொடிப்பொழுதில் பறிபோன உயிர் | School boy died at tirupur by bus accident

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (22/12/2018)

கடைசி தொடர்பு:10:16 (22/12/2018)

தவறிவிழுந்த மாணவன்... கவனிக்காத பள்ளிப் பேருந்து டிரைவர்... நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

திருப்பூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்திலிருந்து தவறி விழுந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அக்ராணம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பரமசிவம். இவரது மகன் சஞ்சீவ்குமார் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல சக மாணவர்களுடன் பள்ளிப் பேருந்தில் ஏறியிருக்கிறார் மாணவர் சஞ்சீவ்குமார். 
பள்ளிப் பேருந்தானது சஞ்சீவ்குமார் வசித்து வந்த அக்ராணம் பகுதியில் நின்று மாணவர்களை இறக்கிவிட்டபோது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற மாணவன் சஞ்சீவ்குமார் கால் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதைக் கவனிக்காத பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இயக்க முட்பட, கீழே விழுந்து கிடந்த மாணவன் சஞ்சீவ்குமாரின் உடல்மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்து போயிருக்கிறார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக மாணவனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்தையடுத்து தப்பியோடிய அப்பேருந்தின் ஓட்டுநரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியோடு வீடு திரும்பிய நிலையில், மாணவன் சஞ்சீவ்குமாரின் மரணம் அவரது பெற்றோர் உறவினர்களையும் கடந்து திருப்பூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.