வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (22/12/2018)

கடைசி தொடர்பு:14:06 (22/12/2018)

`தமிழ் இலக்கியம் தழைக்கச் செய்த மாமழை' - பிரபஞ்சன் மறைவுக்கு திலகவதி ஐபிஎஸ் இரங்கல்!

தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் எழுத்தாளர் பிரபஞ்சன். தனது எழுத்துகள் மூலம் தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என மனித வாழ்வின் உன்னதங்களை, தரிசனங்களைத் தனது எழுத்துகளாக்கியவர்.

பிரபஞ்சன்

உடல்நிலைக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரபஞ்சன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு, உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்தவர், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்படவே மீண்டும் புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உயிர் நேற்று பிரிந்தது. அவரது மறைவுக்கு திலகவதி ஐ.பி.எஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபஞ்சன்

அதில், ``புதுவை தந்த புதுமைச் சிற்பி எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவுச் செய்தி பெருந் துயர் தருகிறது. சக மனிதர்களுடன் பழகுதலில் நாகரிகம், மனித நேயம், பெண்ணுரிமை போன்ற கருத்தியல்களை அழகியலுடன் படைப்பதில் இணையற்ற எழுத்தாளர். அவரது புனை கதைகளை வாசிக்கும் எல்லோர் மனதிலும் "காக்கைச் சிறகினிலே நந்தலாலா" என்ற பாரதியின் பா விரியும். அப்படியொரு செளந்தர்ய உபாசகர். சர்வசாதாரணமாகக் காணக்கூடிய எந்தவொரு நிகழ்விலும் கற்பனைகளை அள்ளித் தெளித்தவர். 

பிரபஞ்சன்

``துவைத்த வேட்டியை விரித்துக் காயப் போட்ட மாதிரி வெளுத்துக் கிடந்தது வானம்" என்ற உவமை ஓர் உதாரணம். 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எழுதப்பட்ட முதலாவது நாட்குறிப்பான `ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகளை'ச் சுற்றிப் பின்னிய தனது கற்பனை புதினமான `வானம் வசப்படும்' நூலுக்காக சாஹித்ய அகாதெமி விருது பெற்றவர்.

திலகவதி ஐ.பி.எஸ்

விருதுகளும், பரிசுகளும் அவரது புகழ் மகுடத்தின் பூஞ்சிறகுகள். தமிழ் இலக்கியம் தழைக்கச் செய்த மாமழை அவர். அவருடைய பிரிவாற்றாமையைத் தாங்கும் சக்தியை அவரது உற்றார் உறவினர்களும், நண்பர்களும் பெறவும்; களைப்பின்றி இலக்கியப் பணியாற்றிய பிரபஞ்சனின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறவும் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க