வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (22/12/2018)

கடைசி தொடர்பு:14:05 (22/12/2018)

மதுரை ஆவினில் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை!- 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

ஓபி.எஸ். தம்பி ஓ.ராஜா, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி  மதுரை ஆவின் சேர்மன் பதவியைக் கைப்பற்றினார் என்ற குற்றச்சாட்டில் கட்சியிலிருந்த நீக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அதே ஆவின் பண்ணையில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகக் கூறி இரண்டு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை நடந்த மதுரை ஆவின்

மதுரை ஆவினில் டிரைவராகப் பணியாற்றி அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் பரமானந்தம், ஆவின் பணியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டி ஆகியோர் அங்கு தற்காலிக ஊழியராக வேலை செய்யும் பெண்களை நிரந்தர ஊழியராக மாற்றுவதாக ஆசை வார்த்தை கூறியும், இன்னும் சிலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆவின் ஆலை வளாகத்திலுள்ள விருந்தினர் விடுதியில் தங்கள் பாலியல் தேவைக்காகப் பெண்களை பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இப்புகார் ஆவின் பொது மேலாளர் கவனத்துக்குச் சென்றதால் உடனே அவர்கள் இருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தை காவல்துறை முழுமையாக விசாரித்தால் ஆவினில் நடந்த பல முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் வெளியே வரும் என்று சொல்கிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கை பெரிதாக்காமல் சாதாரணமாக முடித்துவிட அமைச்சர் தரப்பில் அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இருவரும், இது கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ, எங்களை பழிவாங்க ஆவின் நிர்வாகமே பொய்யாக வெளியிட்டுள்ளது. இதை விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் மதுரை மாவட்ட அ.தி.மு.க-வுக்குள் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க