வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (22/12/2018)

கடைசி தொடர்பு:15:17 (22/12/2018)

நாடாளுமன்றத் தேர்தல், 20 சட்டமன்ற இடைத்தேர்தல்! - கமல்ஹாசன் புதிய அறிவிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

கமல்ஹாசன்

முதலில் பேசிய துணைத் தலைவர் மகேந்திரன், ``மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட மக்கள் நீதி மய்யம் இதே ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்ற முடிவில் உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனக் கூறினார். 

கமல்ஹாசன்

இவரைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ``ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம். 40 தொகுதிகளுக்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அதன் பொறுப்பு துணைத் தலைவர் மகேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றிச் சொல்வதற்கு இப்போது அவசியமில்லை. எங்களுடைய பிரசாரம் தமிழகத்தின் நலனை நோக்கியதாகத்தான் இருக்கும். தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. 

கமல்ஹாசன்

நான் கட்சி தொடங்குவதற்கு முன்னதாகவே சிறியவர், பெரியவர் என வயது வித்தியாசம் பார்க்காமல் அரசியலில் அனுபவமுள்ள பலரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இப்போதும் என் கட்சியில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவெடுக்கப்படும். என் நலனையும் மக்கள் நீதி மய்யத்தின் நலனையும் மனதில் கொண்ட தம்பிகள் நிறைய பேர் சினிமா துறையிலும் வெளியிலும் இருக்கிறார்கள். 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நானும் போட்டியிடவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.