வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (22/12/2018)

கடைசி தொடர்பு:15:36 (22/12/2018)

200 பக்கம் குற்றப்பத்திரிகை!- எப்படியிருக்கிறார் அபிராமி?

அபிராமி

சென்னை குன்றத்தூரில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி, காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். இந்த வழக்கில் 200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

சென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி அபிராமி. கடந்த 1.9.2018-ல் மாங்காடு போலீஸ் நிலையத்தில் விஜய் கொடுத்த புகாரில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அபிராமி கொலை செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ், அபிராமி மற்றும் பிரியாணி கடையில் வேலை பார்த்த சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அபிராமி

வழக்கு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு வந்த அவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸாரிடம் சகஜமாகப் பேசவில்லையாம். அதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும்போதும் அமைதியாகவே இருந்துள்ளார். அவரின் அமைதிக்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராக அவரின் வழக்கறிஞர் மற்றும் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள் எனக் குறிப்பிடும் வகையில் யாரும் வரவில்லையாம். இதனால்தான் அவர் மனவருத்தத்தில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். குறிப்பாக குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட விஷம் தொடர்பான சான்றிதழ்கள், குழந்தைகளின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட், அபிராமியின் செல்போன் கால் ஹிஸ்ட்ரிகள், அவர்களின் கூட்டுச் சதி ஆகியவற்றை ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளோம். அதுதொடர்பான சாட்சிகளையும் சேர்த்துள்ளோம். 

 அபிராமி

சம்பவத்தன்று அபிராமி குழந்தைகளை கொலை செய்தது முதல், கோயம்பேடு வழியாக வெளியூர் தப்பிச் சென்றது வரையிலான தகவல்கள் முழுமையாகக் குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. அதுபோல சுந்தரத்துக்குத் தனியாகக் குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்துள்ளோம். அதில் அபிராமிக்கு மட்டும் ஏறத்தாழ 200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுந்தரத்துக்கு 150 பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் வெளிப்படையாகச் சிலவற்றை சொல்ல முடியாது" என்றார். 

தமிழ்வேந்தன்

வழக்கறிஞர் தமிழ்வேந்தனிடம் பேசியபோது, இந்த வழக்கில் போலீஸாருக்குத் தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக உள்ளது. இந்த வழக்கைத் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த நீதிமன்றத்தில் எந்த நீதிபதி விசாரிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகிவிடும். அதன்பிறகு இந்த வழக்கைத் துரிதமாகவும் விரைவாகவும் முடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக 4 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அபிராமிக்கும் சுந்தரத்துக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் ஜாமீன் கேட்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்காமலேயே வழக்கின் விசாரணையை முடிக்கும் மனநிலையில் போலீஸார் உள்ளனர்'' என்றார். 

அபிராமியின் வழக்கறிஞரிடம் பேச பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவரின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. அவர் விளக்கமளித்தால் பரிசீலனைக்குப் பிறகு அதை வெளியிடத் தயாராக உள்ளோம்.