ஸ்டாலினை அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால்..! - கிண்டல் செய்த செல்லூர் ராஜூ | Minister Sellur raju slmas DMK president stalin

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (22/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (22/12/2018)

ஸ்டாலினை அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால்..! - கிண்டல் செய்த செல்லூர் ராஜூ

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு எந்த வகையிலும் உதவி செய்யாது'' என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ

மதுரை பழங்காநத்தம் பகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறு தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மதுரை ஆவின் தொடர்பான பாலியல் வீடியோ குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. அந்த வீடியோ பதிவுகளை ஊடக நண்பர்கள் பார்த்தால் உண்மை விவரம் தெரியும். அதி.மு.க அரசு தவறு செய்பவர்களை மன்னிக்காது. உடனடியாக நடவடிக்கை எடுக்கும். துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது ஓர்  ஆதாரம்.

 

புதிய ஆழ்துளைக் கிணறு தொடக்க விழாவில் செல்லூர் ராஜூ

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நலமுடன் இருக்க வேண்டும். எதிரிகள் பலமாக இருந்தால்தான் அ.தி.மு.க சிறப்பாகச் செயல்படும். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வல்லமைமிக்கவர். அதனால்தான் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. அதுபோலத்தான் ஸ்டாலினை நினைத்திருந்தோம். ஆனால், அவர் கூடிய விரைவில் தூக்கமின்மை மற்றும் மன உளைச்சல் அடையப் போகிறார். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது. தி.மு.க.வினர் டீ கடை, அழகு நிலையங்கள் என்று சுய தொழில் செய்யும் நபர்களை வாழவிடாமல் ரெளடி ராஜ்ஜியம் செய்கின்றனர். வாரிசு அரசியலை மக்கள் விரும்பமாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு எந்த வகையிலும் உதவி செய்யாது'' என்றார்.