`காவிரிப்படுகை முற்றிலும் அழிவது உறுதி!'- ஓ.என்.ஜி.சி.யைச் சாடும் பேராசிரியர் ஜெயராமன் | Cauvery delta region is in great danger, warns Professor Jayaraman

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (22/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (22/12/2018)

`காவிரிப்படுகை முற்றிலும் அழிவது உறுதி!'- ஓ.என்.ஜி.சி.யைச் சாடும் பேராசிரியர் ஜெயராமன்

மக்கள் வரிப்பணத்தில் ஓ.என்.ஜி.சி. மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய் வயல்களை, தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு முடிவால், காவிரிப்படுகை முற்றிலும் அழியும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.

Delta District

இதுபற்றி பேராசிரியர் ஜெயராமனிடம் பேசியபோது, ``பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் ரூ.13,000 கோடி செலவு செய்து, 115 எண்ணெய் எரிவாயு வயல்களை கண்டுபிடித்தன. இந்த வயல்களையெல்லாம், தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கு முதல் கட்டமாக இந்த எண்ணெய் வயல்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையைகூட மத்திய பெட்ரோலியத்துறை நிறுவனங்கள், மேற்கண்ட நிறுவனங்களுக்கு வழங்கவில்லை். இந்த எண்ணெய் வயல்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு விலை நிர்ணயம், எந்த நாட்டுக்கும் எந்த நிறுவனத்துக்கும் விற்கும் உரிமை ஆகிய அனைத்தையும் இந்த எண்ணெய் வயல்களைக் கைப்பற்றும் தனியார் முதலாளிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மக்கள் வரி பணத்தில் ரூ.13,000 கோடி செலவு செய்து கண்டறியப்பட்ட எண்ணெய் வயல்களை, தனியாரிடம் ஒப்படைப்பது நயவஞ்சகச் செயலாகும். பெருமுதலாளிகளின் கைக்கூலியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்காக தனியாரிடம் கொடுப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகிறார். அவர் கூறுவது உண்மையென்றால் இதன்படி எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அயல்நாட்டுக்கு அல்லது அந்நிய நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்றும், விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் கூறி இருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் கூறப்படவில்லை.

 

ஒற்றை லைசென்ஸ் கொள்கையின் கீழ் வரைமுறையில்லாமல் ஷேல் மற்றும் மீத்தேன் வாயு ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுக்க தனியாருக்கு உரிமை வழங்கப்படுகிறது. இதன்மூலம் வேதாந்தா நிறுவனம், அம்பானி நிறுவனம் ஆகியவை உரிமம் பெற்று காவிரிப்படுகையை அழிக்கும் செயலைத் தொடங்கியிருக்கின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த பொதுமக்கள் போராட முன் வர வேண்டும். இதைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக, ``காவிரி படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்" அவ்வாறு செய்யாவிட்டால் காவிரிப்படுகை முற்றிலுமாய் அழிவது உறுதி" என்றார்.