வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (22/12/2018)

கடைசி தொடர்பு:19:30 (22/12/2018)

`ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது!’ - பொன்.ராதாகிருஷ்ணன்

`ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்தவர்கள் ஆலையைத் திறக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் பார்க்க வேண்டும்’ என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

பொன். ராதாகிருஷ்ணன்

பி.ஜே.பி வழக்கறிஞர் பிரிவு மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,``பட்டாசுத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தும். சபரிமலையில் சாமியை வணங்கச் செல்வதை விட குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில அமைப்பினர் செல்கின்றனர். சபரிமலை போராட்டக்களம் அல்ல. ஆனால், மாற்றுக் கட்சியினர் தங்களது பலத்தை வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாக சபரிமலையைப் பயன்படுத்துகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள்

இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சூழலைத் தடுக்கும் வகையில் சில அமைப்புகள் ஆலைக்கு எதிராகப் போராடிவருகின்றன. ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்கள், ஆலையைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதையும் நாம் பார்க்க வேண்டும். ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக முன்மொழிந்தபோது மேடையில் உள்ளவர்களே அதை ஏற்க முடியாத நிலையில் இருந்தனர். உடனிருந்து குழி பறிக்கும் செயலை ஸ்டாலின் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

பா.ஜ.க கூட்டத்தில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது, இரு தரப்பினர் இரு வேறு கருத்துக்களோடு போராடிவருகின்றனர். இதை ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.கஜா புயல் நிதியைப் பெறும் விவகாரத்தில் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.