டாஸ்மாக் கடைகளுக்கு நடுவே அரசு கண்காட்சி - அதிருப்தியில் தேனி மக்கள்! | Government exhibition in the middle of the tasmac in Theni

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (22/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (22/12/2018)

டாஸ்மாக் கடைகளுக்கு நடுவே அரசு கண்காட்சி - அதிருப்தியில் தேனி மக்கள்!

டாஸ்மாக் அருகே அரசு பொருள்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தேனி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்காட்சி

செய்தி மற்றும் மக்கள் தொடர்ப்புத்துறை சார்பாக தேனி மாவட்டத்தில் முதன்முறையாக அரசு பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 நாள்கள் செயல்படும் அரசு பொருள்காட்சியில் அரசு துறை சார்பில் 32 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பொருள்காட்சியின் துவக்க விழாவில், துணைமுதல்வர் ஓ.பி.எஸ், செய்தி மற்றும் மக்கள் தொடர்ப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி எம்.பி பார்த்திபன், செய்தி மற்றும் மக்கள் தொடர்ப்புத்துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

டாஸ்மாக்

இந்த அரசு பொருள்காட்சியானது மூன்று டாஸ்மார்க் கடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பெரும் பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ள சூழலிலும், இன்று வரை புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைகள் அகற்றப்படாத நிலையில் தான் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று டாஸ்மார்க் கடைக்கு மிக அருகிலேயே அரசு பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று அரசு பொருள்காட்சி தான். தற்போது அது டாஸ்மார்க் கடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது தேனி மக்களிடையே அதிருப்தியை மட்டுமல்லாமல், பொருள்காட்சிக்கு பெண்கள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரலாமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு பொருள்காட்சி துவக்க விழாவில் பேசிய ஓ.பி.எஸ், "தேனி மக்களுக்கு இந்த பொருள்காட்சி மகிழ்ச்சியை கொடுக்கும்.!" என்றார்.