ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்கள் விற்க முயற்சி! - 7 பேர் கைது | Forest department arrest 7 near srivilliputhur over Ivory sales

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (22/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (22/12/2018)

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்கள் விற்க முயற்சி! - 7 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சாம்பல்நிற அணில்கள் சரணாலயத்தில் யானை, புலி, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் ஏராளமான பறவையினங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கடந்த 10 நாள்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

அதன்பேரில் வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். சாத்தூர் எஸ்.ஆர்.நாயுடுநகரில் உள்ள அசோக் என்பவரது கடையில் யானை தந்தங்கள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் இருந்த தலா ஒன்றரை அடி நீளம் கொண்ட 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் கடை உரிமையாளர் அசோக், இப்ராகிம், பாண்டி, மாரிமுத்து, இராஜகுரு, மாரிமுத்து, ஜஸ்டின்பிரபாகரன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த தந்தங்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தினர் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.