`மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல் | Anti sterlite movement urged TN government should pass Special resolution in assembly in sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (22/12/2018)

கடைசி தொடர்பு:23:45 (22/12/2018)

`மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்!’ - ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட  சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றிட வலியுறுத்தி வரும் 24ம் தேதி  குழந்தைகளுடன் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான  தமிழர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு

துாத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அ.குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து துவங்கினr. இதில், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, போராட்டக்காரர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், போராட்டத்தில் ஈடுபடுத்தினர். அது கவனம் ஈர்க்காத நிலையில், குழந்தைகள் மற்றும் ஊர்மக்கள் துாத்துக்குடி நகரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சார் ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  போலீசார் அவர்களை  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.   தொடர் போராட்டங்களில் குழந்தைகள் முன்னிறுத்தப்பட்டனர்.

ஸ்டெர்லைட்

இந்நிலையில், கடந்த மே 22ம் தேதி நடைபெற்ற ஆட்சியர் அலுவலகம் நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மே-28ம் தேதி ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம்  தீர்ப்பளி்த்துள்ளது. இதனை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.  இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலைக்கு  எதிரான  தமிழர்கள்  கூட்டமைப்பினர், தாங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தை  குழந்தைகளை மையப்படுத்தி அறிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பு

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ்மாந்தன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, வேல்ராஜ் மற்றும் ஹில்லாரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  " ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணி என்ற பெயரில் பள்ளி, கோயில், நீர்நிலைப் பராமரிப்பு, குடிநீர் தொட்டி என, பல தளங்களில் உதவி செய்வதன் மூலம் பொதுமக்களை ஊழல் மயப்படுத்தும் முயற்சிகள் செய்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்

நாசக்கார ஆலையைத் திறக்கும் நோக்கில், ரூ.100 கோடி   செலவில் மருத்துவமனை, பள்ளிக்கூடம் அமைப்போம் என பொதுமக்களை ஏமாற்ற நினைக்கிறது. இந்த ஆலையை  நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி  சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும். ஆலை இயங்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி  வரும் 24-ம் தேதி, குழந்தைகளுடன், பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்"என்றார். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படக் கூடாது என மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளின் நோக்கமாக இருந்தாலும், போராட்டங்களில் விவரமறியாக்  குழந்தைகளை முன்னிறுத்துவது சரியா என்ற கேள்வியை ஒருதரப்பினர் முன்வைக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க