'1கோடிக்கு விலை பேசப்பட்ட பஞ்சலோக முருகன் சிலை!'- அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் குழு | Pon manikavel team Seized Murugan statue, which is worth Rs 1 crore

வெளியிடப்பட்ட நேரம்: 22:56 (22/12/2018)

கடைசி தொடர்பு:00:30 (23/12/2018)

'1கோடிக்கு விலை பேசப்பட்ட பஞ்சலோக முருகன் சிலை!'- அதிரடி காட்டிய பொன்.மாணிக்கவேல் குழு

தொன்மை வாய்ந்த பஞ்சலோக முருகன் சிலையை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.

முருகன் சிலை


சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.இந்த நிலையில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி இளங்கோ, டி.எஸ்.பி பழனிச்செல்வன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் டி.ஜி.பி-யைச் சந்தித்தனர். அவர்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் நடந்த உள்விவகாரங்கள் குறித்து மனு கொடுத்தனர். தன் மீதான புகாருக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல், `என் மீது புகார் அளித்தவர்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. இந்த 21 பேர் யார் என்று கூட தெரியாது’ என்றார்.

பொன் மாணிக்கவேல்

இந்நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு குழுவினர் தொன்மையான பஞ்சலோக முருகன் சிலையை மீட்டுள்ளனர். இன்று மதியம் 2மணி அளவில் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான  குழு ஈக்காட்டுத்தாங்கலில் பழமை வாய்ந்த முருகன் சிலை 1கோடிக்கு விலை பேசி விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து அப்பகுதிக்கு விரைந்தனர். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிவக்குமார் லேத் பட்டறையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை கைப்பற்றி மீட்டனர். விசாரணையில் இந்த சிலையானது தமிழகத்தைச் சேரந்த பழமையான கோயிலில் இருந்து திருடப்பட்டது என்றது தெரியவந்தது. அரக்கோணத்தையடுத்த நெமிலியை சேர்ந்த தேசனடிகள் கன்னியாகுமரியைச் சேர்ந்த முகேஷ் ஆகியோர் இத்தொன்மையான சிலையை விற்க இருந்ததாக தெரியவந்தது.

பொன் மாணிக்கவேல்

இந்த சிலையை மீட்கும்போது லேத் பட்டறை இருக்கும் கட்டிடத்தின் உரிமையாளர் சீனிவாசன் உடனிருந்தார். சிலையையை கைப்பற்றிய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். நாளை சிவகுமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்த உள்ளனர். இந்த சிலை இரண்டரை ஆண்டுக்கு முன் அரக்கோணத்தையடுத்த நெமிலியில் உள்ள இந்து கோயிலிருந்து திருடப்பட்டது தெரியவந்தது.