‘நடிகர் கமல்ஹாசன் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறார்’- அமைச்சர் கடம்பூர் ராஜூ | Actor Kamal haasan had more stress says minister kadambur raju

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (23/12/2018)

கடைசி தொடர்பு:05:00 (23/12/2018)

‘நடிகர் கமல்ஹாசன் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறார்’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர் கமலஹாசன் மன அழுத்தத்தில் உள்ளதாக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கடம்பூர் ராஜூ

துாத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர்  ராஜூ கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை  துவக்கி  வைத்தார். பின் கயத்தாறு - கடம்பூர் இடையே 8.66 கோடி  ரூபாய் மதிப்பீட்டில், துவங்க உள்ள சாலைப் பணிகளை சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணனுடன் இணைந்து  துவக்கி  வைத்தார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடிகர் கமல்ஹாசன் நல்ல மனநிலையில் இல்லை. அவரது  விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்ததும்,  நாட்டை விட்டே வெளியேறுவேன் என அவர் கூறினார். அவரை நாட்டை விட்டு வெளியேறிப் போகவிடாமல் பிரச்னையை தீர்த்தது இந்த அ.தி.மு.க., அரசுதான். அரசு அதிகாரிகளை பணி செய்ய வைப்பதுதான் அரசின்  கடமை.

அதற்காக யாருக்கும் அழுத்தம் கொடுப்பது கிடையாது. நடிகர் கமல் அரசியலில் கால் பதித்துவிட்டு மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறார். அவர் அதனை சரி செய்தால் அவருக்கும் நல்லது. அவர்  உடலுக்கும்,  அவரது நிலைப்பாட்டுக்கும் நல்லது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்னை பல மாதங்களாக இருந்து வருகிறது. அங்கு தேர்தல் நடைபெற்று பின், பொதுக்குழுவை கூட்டியபோது, கூட்டம் நடைபெறாமல் பிரச்னைகள்  எழுந்தது,  கணக்கு வழக்குகள் சரியில்லை  அவர்களுக்குள் பல மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது.

அமைச்சர்

தலைவர் என்ற முறையில் நடிகர் விஷால்,  நடுநிலையாளர்களை வைத்து பிரச்னை தீர்த்திருக்கலாம். நீண்ட கால அவகாசம் இருந்தது. தேவையில்லாமல்  இப்போது பிரச்னை ஏற்பட்டிருக்காது. அரசுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்னை இல்லை. சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிற நேரத்தில் அரசு தலையிட வேண்டிய நிலையில்  உள்ளது. சங்க கணக்குகள் தொடர்பாக புகார் எழுந்துள்ளதால், அதனை  சட்டப்படி ஆராய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்பு தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு குடும்பம் மட்டுமே திரைப்படம் எடுக்கலாம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், தற்போது யார் வேண்டுமானாலும் திரைப்படத்துறையில் கால் பதிக்கலாம் என்ற நிலை உள்ளது." எனக்  கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க