‘கழிவறை இல்லாதது அவமானம்’ - தந்தை மீது புகார் அளித்த மாணவிக்கு இலவச வீடு! | A free home for a student who complained to father for toilet

வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (23/12/2018)

கடைசி தொடர்பு:06:45 (23/12/2018)

‘கழிவறை இல்லாதது அவமானம்’ - தந்தை மீது புகார் அளித்த மாணவிக்கு இலவச வீடு!

ஆம்பூரில் கழிவறை கட்டித்தராத தந்தை மீது போலீஸில் புகார் அளித்த மாணவிக்கு, மத்திய அரசு திட்டத்தில் இலவச வீடு கட்டித்தரும் ஆணையை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

அமைச்சர்

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இஹ்ஸானுல்லா. இவரின் மகள் ஹனீப்பா ஜாரா (7). இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அறிவுப்பூர்வமாகப் பேசக்கூடிய சுட்டித்தனமாவாளும் கூட. வறுமையில் வாடும் இவர்களது வீட்டில் கழிவறை வசதியில்லை. சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வு சிறுவயதிலேயே மாணவி ஹனீப்பா ஜாராவுக்கு இருந்ததால், கழிவறை கட்டித் தராத தந்தை மீது சமீபத்தில் போலீஸ் நிலையத்திற்கே சென்று புகார் அளித்தார். ‘கழிவறை இல்லாதது அவமானம்’ என்று அந்த மாணவி கூறிய வார்த்தை, ‘திறந்தவெளியைப் பயன்படுத்தி வருபவர்களின் புத்திக்கு அப்போது தான் எட்டியது’. பல்வேறு தரப்பில் இருந்து மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்தன.

கலெக்டர் ராமன், அந்த மாணவியை நேரில் சந்தித்து பாராட்டினார். மாணவியைக் கௌரவிக்கும் விதமாக, ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விழிப்புஉணர்வுத் தூதுவராக (பிராண்ட் அம்பாசிடர்) நியமித்து, நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார். கழிவறையும் மாணவியின் வீட்டிற்கு ஒரே நாளில் கட்டித்தரப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியின் போது மாணவி ஹனீப்பா ஜாராவுக்கு, ‘மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் புதிய வீடு கட்டித் தருவதற்கான ஆணையை’ அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
 

அப்போது, சின்னஞ்சிறு குறும்புத்தனம் நிறைந்த அந்த மாணவியின் கன்னத்தை கிள்ளி அமைச்சர் வீரமணி கொஞ்சி மகிழ்ந்தார். அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் தன்னையே மறந்து குழந்தையுடன் விளையாடிய நிகழ்வு பார்வையாளர்களை நெகிழச் செய்தது. இதனிடையே, ‘‘கழிவறைக்காகத் தந்தை மீது இந்த மாணவி புகார் அளித்தது சிலரின் தூண்டுதல்.அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டவை’’ என்று வதந்திகளும், பொய் பிரசாரங்களும் பரப்பப்பட்டு வருகின்றன. ‘‘பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நோக்கங்களும், அதற்கான செயல்பாடுகளும் நல்லதே.மாணவியின் துணிச்சலான இந்த செயலை பாராட்டாமல் கூட இருந்துவிடலாம். ஆனால் பொய் பிரசாரத்தை வாரி இரைப்பது கண்டிக்கத்தக்கது. மாணவி பாராட்டுக்குரியவரே...’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.