‘கணித மேதை பிறந்த மண்ணை அரசு கண்டுக்கலையே!’ - கலங்கும் ஆர்வலர்கள் | Government will give importance to the birth place of ramanujam

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (23/12/2018)

கடைசி தொடர்பு:07:30 (23/12/2018)

‘கணித மேதை பிறந்த மண்ணை அரசு கண்டுக்கலையே!’ - கலங்கும் ஆர்வலர்கள்

கணித மேதை ராமானுஜத்தினுடைய பிறந்தநாள் பல இடங்களில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், அவர் பிறந்த ஈரோடு மண்ணில் உற்சாகம் குறைவாகவே இருந்தது.

அரசு

கணித மேதை ராமானுஜம் பிறந்த ஈரோடு அழகிய சிங்கர் வீதியில், அவருடைய பிறந்தநாளையொட்டி ‘ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்’ சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். சிமெண்டினால் செய்யப்பட்டிருந்த ராமானுஜத்தினுடைய உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

கணித மேதை ராமானுஜத்தின் தாய்வழிப் பாட்டனார் ஈரோடு நீதிமன்றத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பிரசவத்திற்காக ராமானுஜத்தின் தாயார் கோமளத்தம்மாள் ஈரோடு வந்து தங்கியிருந்தபோது 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி உலகம் கொண்டாடும் கணித மேதையான ராமானுஜம் பிறந்தார். சிறுவயதிலேயே கணிதத்தில் புலமைபெற்று விளங்கி, உலகளவில் தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்த ராமானுஜத்திற்கு, பூர்விகமான கும்பகோணத்தில் அரசு தரப்பில் நினைவில்லம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்த மண்ணான ஈரோட்டில் அவருக்கான அடையாளங்கள் எதுவுமில்லை எனச் சமூக ஆர்வலர்கள் பலரும் வருத்துகின்றனர்.

ராமானுஜம்

இதுகுறித்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், ஈரோடு மாநகராட்சியின் 27-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் இராதாமணிபாரதி அவர்களிடம் பேசினோம். “கணித மேதை ராமானுஜம் பிறந்த ஈரோடு மண்ணில் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் எவ்வித அடையாளங்களும் இல்லாதது வருத்தமளிக்கிறது. வெளிநாட்டில் இருந்து பலரும் வந்து அவர் வாழ்ந்த பகுதியில் டாக்குமெண்டரி வீடியோ போன்றவற்றை எடுத்துச் செல்கின்றனர்.

அமெரிக்காவிற்கும் ராமானுஜத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவருடைய கணிதத் தியரிகளை அவர்களுடைய பல்கலைக்கழகத்தில் வைத்திருக்கின்றனர். கணிதம் சம்பந்தமாக படிப்பவர்களுக்கு மட்டுமே ராமானுஜம் புகழ் தெரிகிறது. காந்தி, பாரதி வாழ்ந்த காலத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்தவர் ராமானுஜம். அவர் போட்ட தேற்றத்திற்கு விடை தெரியாமல் இன்னும் முழித்துக் கொண்டிருக்கிறோம். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு கொடுத்தார். அப்படிப்பட்ட மாமேதைக்கு அவர் பிறந்த ஈரோட்டில் அரசு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை. நிகழ்ச்சிக்கு வந்த எம்.எல்.ஏக்களிடம் இதுசம்பந்தமாக கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் இதனை முதலமைச்சரிடம் பேசுவதாக சொல்லியிருக்கின்றனர்” என்றார்.  

தொடர்ந்தவர், “கணித மேதை ராமானுஜம் பிறந்த அழகிய சிங்கர் பகுதியில் நான் கவுன்சிலராக பலமுறை பணியாற்றியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்கு முன்பு, நான் கவுன்சிலராக இருந்த நேரத்தில், ‘கணிதமேதை ராமானுஜம் பிறந்த இல்லம் அமைந்துள்ள வீதிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும்’ என மாநகராட்சி தீர்மானம் இயற்றினோம். மேலும், ஈரோடு மாநகரில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கவும், ராமானுஜம் பெயரில் ஈரோட்டில் கணிதப் பூங்கா மற்றும் பல்கலைக்கழகம் அமைக்கவும், ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு அவருடைய பெயரை வைக்க வேண்டுமெனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இதனை எங்களுடைய கோரிக்கையாக அரசு நினைக்காமல், ஒரு கணித மாமேதைக்குக் கொடுக்கப்பட வேண்டிய அங்கீகாரமாக நினைத்துச் செய்ய வேண்டும்” என்றார்.