‘ஆம்புலன்ஸில் ஓர் உயிர் போராடுகிறது, வழிவிடுங்க மக்களே!’ - ஈரோடு எஸ்.பியின் அசத்தல் முயற்சி... | erode sp sakthi ganesan taking a huge idea for saving humans life...

வெளியிடப்பட்ட நேரம்: 08:33 (23/12/2018)

கடைசி தொடர்பு:08:33 (23/12/2018)

‘ஆம்புலன்ஸில் ஓர் உயிர் போராடுகிறது, வழிவிடுங்க மக்களே!’ - ஈரோடு எஸ்.பியின் அசத்தல் முயற்சி...

ஆம்புலன்ஸ்

உயிருக்குப் போராடும் ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறோம். குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை. அப்படியிருக்க, ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அந்த ஆம்புலன்ஸில் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இருந்தால், உங்கள் மனது எப்படிப் பதைபதைக்கும்?... இப்படிப் பதைபதைப்போடு எத்தனையோ பேர் கடந்துபோயிருப்பார்கள். ஆனால், அப்படியொரு நிலை இனி யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கின்ற ரீதியில் ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் அசத்தலான முயற்சி ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் கோ-ஆர்டினேட்டர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் எனப் பலரையும் இணைத்து ‘108 எக்ஸ்பிரஸ் காரிடர் (108 express corridor)' என்கின்ற வாட்ஸப் குழு ஒன்றை ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் உருவாக்கியிருக்கிறார். ஓர் இடத்தில் விபத்து நடந்திருக்கிறது என்று 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தி வருகிறதென்றால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வசதியாக இக் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, விபத்து நடந்திருக்கும் இடத்தையும், பாதிக்கப்பட்டவரின் விவரத்தையும் சம்பந்தப்பட்ட 108 ஓட்டுநர்கள் இக் குழுவில் பதிந்தால், விபத்து நடந்த இடத்திலிருந்து மருத்துவமைக்குச் செல்லும் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வேலையில் போலீஸார் இறங்குவார்கள். முக்கியமான சாலை சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வரும் முன்னர் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் ‘ஆம்புலன்ஸ் வருகின்றது’ என்ற அறிவிப்பினை செய்து, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளைச் சாலையின் இடதுபுறம் ஒதுங்கி, வலதுபுறமாக 108 ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல ‘எக்ஸ்பிரஸ் ஃப்ரீ வே (express free way)' என்ற அதிவேக விரைவு வழியை உருவாக்கி, ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள். அதாவது முக்கியப் பிரமுகர்கள் செல்லும்போது எவ்வாறு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறதோ, அப்படி அனைத்து 108 ஆம்புலன்ஸ்களுக்கும் செல்ல வசதி செய்து கொடுக்கப்படும்.

எஸ்.பி

முதலில் பாதிக்கப்பட்ட நபரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வருவதைப் போன் மூலமாக அந்த லிமிட் போலீஸ் அதிகாரியிடம் தெரிவிப்பார்கள். அது மைக் மூலமாக அனைவருக்கும் அலர்ட் ஆக கொடுக்கப்படும். பிறகு அந்த தகவல் வாட்ஸப்பிலும் பதியப்படும். இதற்குள் மருத்துவமனையைச் சுற்றிலும் சுமார் 2 கி.மீ சுற்றளவில் ஒலிபெருக்கிகள் மூலம், ‘உயிருக்கும் போராடும் ஒருவரை ஏற்றிக்கொண்டு வரும் ஆம்புலன்ஸிற்கு வழிவிடுங்கள்’ என வாய்ஸ் ஒலிக்கப்படும். இப்படி உயிருக்குப் போராடும் ஒருவர் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்படுவார்.

எஸ்.பிஇதுகுறித்து ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன் அவர்களிடம் பேசினோம். “டிசம்பர் 21-ம் தேதி நான் டியூட்டி முடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். என்னோட வண்டிக்குப் பின்னாடி, சைரன் சத்தத்தோட 108 ஆம்புலன்ஸ் ஒன்று பரபரப்பாக வந்தது. அந்தநேரம் பார்த்து ரோட்டில் கடுமையான டிராஃபிக் ஜாம். உடனே நான் என்னுடைய காரில் இருந்த சைரனை ஒலிக்கவிட்டு, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி 108 ஆம்புலன்ஸிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்த நேரத்தில் நாம் அங்கு இருந்ததால், ஆம்புலன்ஸிற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டோம். எத்தனை ஆம்புலன்ஸ்கள் டிராஃபிக் ஜாமில் சிக்கி தினமும் அவஸ்தைப்படும். அதற்கு ஒரு தீர்வினை நாம் செய்ய வேண்டுமென்று,  ‘108 எக்ஸ்பிரஸ் காரிடர்’ என்ற வாட்ஸப் குழு ஒன்றை ஏற்படுத்தி, அதில் போலீஸார், 108 கோ-ஆர்டினேட்டர்கள் மற்றும் மருத்துவர்களை இணைத்திருக்கிறேன். 

உயிருக்குப் போராடும் ஒருவரை ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது, போக்குவரத்தில் சிக்கி உரிய நேரத்தில் அவரை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் போனால் என்னாவது?... ஒரு குடும்பத் தலைவருக்கு இப்படி ஏதாவது நேர்ந்தால், அந்த இழப்பு பொருளாதார ரீதியாக அந்தக் குடும்பத்தையே பின் தள்ளிடும். அந்தவகையில், இந்த உலகத்துல ஒவ்வொரு உசுரும் முக்கியங்க. சாலையில் செல்லும் மக்கள், ஆம்புலன்ஸ்க்கு வழிவிடணும்னு ஆளுக்கொரு திசையில் ஒதுங்குகிறார்கள். 108 ஆம்புலன்ஸின் சைரன் ஒலி கேட்டவுடன், சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையின் இடதுபுறமாக ஒதுங்கிப் பாதிக்கப்பட்ட நபர்களின் உயிர்காக்கும் பொருட்டு வழிவிட வேண்டும். அந்தவகையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால், நிச்சயமாகப் பல உயிர்களை நாம் ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்” என்றார்.

காக்கி உடையில் ஒருசில கருணையுள்ள, மனிதமுள்ள ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் முயற்சிக்கு ஒரு பெரிய சல்யூட் மிஸ்டர் எஸ்.பி சக்தி கணேசன்!...