மின்சார ஊழியர்களின் மெத்தனம்; பரிதாபமாக உயிரிழந்த மாடுகள் - பிழைப்பை இழந்த விவசாயி! | Pudukottai near electricity flowed 5 buffaloes die; Farmers sad!

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (23/12/2018)

கடைசி தொடர்பு:14:01 (23/12/2018)

மின்சார ஊழியர்களின் மெத்தனம்; பரிதாபமாக உயிரிழந்த மாடுகள் - பிழைப்பை இழந்த விவசாயி!

புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து 5 எருமை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எருமை மாடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையா(80). இவர் 5 எருமை மாடுகள் வைத்துள்ளார். எருமை மாட்டை மேய்த்து, அதன் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். தினமும் இந்த பகுதியில் உள்ள வயல் பகுதிகளில் மேய்ச்சலைக்கு மாடுகளை அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, சின்னையா மகன் ரங்கசாமி மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்துச் சென்று உள்ளார். அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், 35 நாட்களுக்கு பிறகு தான் கட்டியாவயல் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு கொடுத்த மின் பணியாளர்கள், சாய்ந்து கீழே கிடக்கும் மின் கம்பங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தை துண்டிக்காமல் விட்டதால், மின் கம்பிகளை கடக்க முயன்ற எருமை மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மாடுகள் தூக்கி வீசப்பட்டு 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.  உயிரிழந்த மாட்டை சின்னையா மகன் ரங்கசாமி தூக்க முயன்ற போது அவருக்கும் மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எருமை மாடுகள் உயிரிழப்பு

இருந்த 5 மாடுகளும் இறந்ததால், அந்த விவசாயி செய்வது அறியாது பரிதவித்து வருகிறார். முழுமையாக மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் மின்விநியோகம் வழங்கப்பட்டதால், தான் 5மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் மின் இணைப்புகளை சீரமைத்து பகுதி மின்சாரம் வழங்கி, அதனை முறையாக தெரிவிக்காததால், ஆலங்குடி அருகே அரையப்பட்டி பகுதியில் சுசிலா, சக்திவேல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது 5மாடுகள் இறந்துள்ளன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் கவனத்துடன் அதிகாரிகள் மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது