தீவிரமான போராட்டம் - சபரிமலை சென்ற தமிழக பெண்கள் சன்னிதானம் செல்லமுடியாமல் திரும்பினர்! | 11 women try to trek Sabarimala - tension prevails in Pamba

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (23/12/2018)

கடைசி தொடர்பு:13:40 (23/12/2018)

தீவிரமான போராட்டம் - சபரிமலை சென்ற தமிழக பெண்கள் சன்னிதானம் செல்லமுடியாமல் திரும்பினர்!

போலீஸ் எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டது என மனிதி பெண்கள் கூறிய நிலையில், அவர்கள் திரும்பிச் செல்வதாக கூறியதால் திருப்பி அனுப்பினோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பெண்கள்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து தமிழ்நாட்டிலுள்ள மனிதி அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் மதுரையில் இருந்து தேனி வழியாகப் பம்பையை அடைந்தனர். இன்று 3 மணியளவில் பம்பையை அடைந்த அவர்களுக்கு இருமுடி கட்ட பூசாரிகள் முன்வராததால் அவர்களே சுயமாக இருமுடிக்கட்டி சன்னிதானம் செல்ல முயன்றனர். பம்பையில் காவல்துறை பரிசோதனை பகுதியைத் தாண்டி சன்னிதானம் செல்ல முயன்றபோது ஐயப்ப பக்தர்களின் சரணகோஷ போராட்டம் தீவிரம் ஆனது.

தமிழக பெண்கள்

இதையடுத்து அங்கிருந்து திரும்பிய பெண்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்தனர். பின்னர் காவல்துறையினர் பேருந்தில் வைத்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 11 பெண்களும் போலீஸ் வாகனத்தில் நிலக்கல்லுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் போலீஸ் தங்களை திருப்பி அனுப்பிவிட்டதாக மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் போலீஸ் அதிகாரிகளோ, அவர்களாக விருப்பப்பட்டுத்தான் திரும்பிச் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் வந்தால் பாதுகாப்பு அளிக்கத் தயாராக இருக்கிறோம் என்றனர். மனிதி பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பம்பையில் இருந்து திரும்பிச் சென்றதை அடுத்து இன்று அதிகாலை 3 மணிமுதல் மதியம் 1- மணி வரை சுமார் 10 மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவிற்கு வந்தது.