படகில் ஏறமுயன்ற இலங்கை கடற்படை வீரர் கடலில் விழுந்து மாயம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு | The Sri Lankan naval officer who tried to climb the boat fell into the sea.

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (23/12/2018)

கடைசி தொடர்பு:15:30 (23/12/2018)

படகில் ஏறமுயன்ற இலங்கை கடற்படை வீரர் கடலில் விழுந்து மாயம்; ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் படகினை சோதனை செய்ய முயன்ற இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனால் படகுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.

மீனவர்கள் கண்காணிப்பில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று பகல் 2 மணியளவில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதையடுத்து நிறுத்தப்பட்ட படகு ஒன்றில் சோதனை செய்வதற்காக  இலங்கை கடற்படை வீரர் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது அந்த வீரர் கடலில் தவறி விழுந்துள்ளார். கடலில் விழுந்த வீரரை மீட்கும் முயற்சியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் மீனவர்கள் தங்கள் படகுடன் அங்கிருந்து கிளம்பி நேற்று இரவு கரை திரும்பினர்.

இதனிடையே கடலில் விழுந்த இலங்கை கடற்படை வீரர் குறித்த தகவல் மற்ற பகுதிகளில் இருந்த இலங்கை கடற்படையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு வந்த அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் கடலில் விழுந்த இலங்கை கடற்படை வீரர் மீட்கப்பட்டார். ராமேஸ்வரம் மீனவர் படகில் சோதனையிடச் சென்ற தங்கள் வீரரை, படகில் இருந்த மீனவர்கள் கடலில் பிடித்துத் தள்ளிவிட்டு படகுடன் மீனவர்கள் தப்பி சென்று விட்டதாக இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படை மற்றும் இந்திய வெளியுறவு துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சையினால்  ராமேஸ்வரம் மீனவர்களிடையே அச்சம் மீன்பிடிக்கச் செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க