"யாரிடம் முறையிட?" -  நீதிபதி கிருஷ்ணய்யர் தீர்ப்பைச் சுட்டிக்காட்டும் அற்புதம்மாள்! | arputham ammal talks about justice krishna iyer

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (23/12/2018)

கடைசி தொடர்பு:14:40 (23/12/2018)

"யாரிடம் முறையிட?" -  நீதிபதி கிருஷ்ணய்யர் தீர்ப்பைச் சுட்டிக்காட்டும் அற்புதம்மாள்!

மருராம் வழக்கில் மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்து தெரிவித்திருப்பார். அந்த வரிகளைச் சுட்டிக்காட்டி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

பேரறிவாளன்  - அற்புதம்மாள்

"யாரிடம் முறையிட?" என்ற தலைப்பில் கிருஷ்ணய்யரின் தீர்ப்பு வரிகளை மேற்கோள் காட்டியுள்ள அற்புதம்மாள், "அரசியல் சட்ட விளக்கம் தந்தீர், அறிவின் நீதி உரக்கச் சொன்னீர், அய்யா! நீயிலா உலகில் நீதிமான் யாரோ?" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் நீதிபதியுடனான தனது சந்திப்பு அடங்கிய  45 விநாடிகள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அற்புதம்மாள்ளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, “என் மகன் விடுதலையில் ஆளுநர் செய்து வரும் காலதாமதம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதை ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் எடுத்துரைக்க நீதிபதி கிருஷ்ணய்யர் இல்லையே என்ற ஆதங்கத்தில் தான் இதனைப் பதிவு செய்தேன். முன்னதாக மருராம் வழக்கில் நீதிபதி வழங்கிய தீப்பில்,  ‘அமைச்சரவை முடிவைத் தாண்டி ஆளுநருக்குத் தனிப்பட்ட அதிகாரங்கள் ஏதுவும் இல்லை எனவும் ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை முடிவினை ஆளுநர் ஏற்றாகவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அற்புதம்மாள்

எனது மகனின் நியாயத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி கிருஷ்ணய்யர்,  மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா படீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு, அறிவின் விடுதலைக் குறித்து தனது இறுதிக் காலம் வரை தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். எனது மகனின் "தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூலுக்கு 2006-ம் ஆண்டு அறிமுகம் வழங்கினார். 

அந்த அறிமுகத்தில் அறிவை பற்றி குறிப்பிடும்போது, "பேரறிவாளனின் ஆன்மா உயர்வானது. விலை மதிப்பற்றது. அவரின் பழக்க வழக்கங்கள் உன்னதமானவை. சிறையில் அடைபட்டிருப்பதால் அவர் குற்றவாளி இல்லை" என்று குறிப்பிட்டதை எனது வாழ்நாள் பொக்கிஷமாக நானும் எனது மகனும் கருதுகிறோம். சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் முதலில் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பதே எனது மகனின்  விருப்பமாக இருந்தது. சிறையில் பொது தொலைப்பேசி வசதி செய்து தரப்பட்ட 2014-ம் ஆண்டு நவம்பரில் முதன் முதலில் அவருடன் பேசியதை, தனது விடுதலைக்கு அவரது வாயால் வாழ்த்து பெற்றதை இன்றளவும் அறிவு பெருமையாக சொல்வான். அவனது விருப்பம் நிறைவேற வாய்ப்பின்றி அவனது விடுதலையைப் பார்க்காமலே நீதிபதி மறைந்துவிட்டார். எனவே எனது 28 ஆண்டுக்கால போராட்டத்தில் அவரது இழப்பைப் பேரிழப்பாக, எவராலும் ஈடு செய்யமுடியாத இழப்பாகப் பார்க்கிறேன்" என்றார்.

நீதிபதி கிருஷ்ணய்யர்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.  கேரளாவைச் சேர்ந்த இவர் வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் இவர் பேரறிவாளன் விடுதலைக்கு அதிகம் குரல் கொடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.