வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (23/12/2018)

`கார்பரேட்டுக்காக செயல்படும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!’ - கனிமொழி

`கார்பரேட்டுக்காக மக்களை கொல்லும் அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்

கனிமொழி

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான உடற்கூறாய்வு அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கனிமொழி ட்வீட்

அந்தப் போராட்டத்தில் இறந்தவர்களில் மிக இளையவரான 17 வயது ஸ்னோலின் பின் மண்டையில் துப்பாக்கித் தோட்டாவால் சுடப்பட்டிருக்கிறார். அது அவர் வாய் வழியாக வெளியேறி அவர் இறந்திருக்கிறார்” மேலும் இருவர் மண்டையோட்டில் பக்கவாட்டில் சுடப்பட்டு இறந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தனது வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த 40 வயது ஜான்சி காதுப்பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார். 34 வயது மணிராஜன் நெற்றிப் பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார் என்று அதிர்ச்சியூட்டக்கூடிய விஷயங்களை அந்த உடற்கூராய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இந்த தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி கனிமொழி, ``#ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி அரசால் திட்டமிடப்பட்ட  படுகொலை என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு  தெரிவிக்கிறது.  பெரும்பாலானவர்கள் மார்பிலும்,தலையிலும் பின்னிலிருந்து சுடப்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை கொல்லும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.