`தலைவர்கள் படம் போட்ட காலண்டர் விற்பனை’ - கைதான சமூக ஆர்வலர்! | Social activist arrest by police

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (23/12/2018)

கடைசி தொடர்பு:07:58 (24/12/2018)

`தலைவர்கள் படம் போட்ட காலண்டர் விற்பனை’ - கைதான சமூக ஆர்வலர்!

பிரபாகரன், வீரப்பனின் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர் வைத்திருந்ததாக கூறி, ஸ்டெர்லைட் எதிராகப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டவரை காவல்துறையினர் கைது செய்து செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                           சமூக ஆர்வலர்

அரியலூரில் தமிழ்களம் என்ற பெயரில் புத்தக விற்பனை நிலையம் நடத்தி வருபவர் இளவரசன். தமிழ்ப் பற்றாளரான இவர், புத்தகக் கண்காட்சி நடத்துவது, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவது எனச் சமூகம் சார்ந்த பிரச்னைகளில் குரல்கொடுத்துவருகிறார். இந்த நிலையில் சிமென்ட் ஆலைகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிராகவும், இயற்கையைப் பாதிக்கும் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். 

                                     

இந்த நிலையில், இவரது புத்தகக் கடையில் தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன், கலியபெருமாள், தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவர் இளவரசன் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர் வைத்திருந்ததாகவும், அதை விற்பனை செய்ததாகவும் கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் இளவரசனைக் கைது செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஜன.4-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்படைய வைத்துள்ளது. 

                                                         சமூக ஆர்வலர்
என்ன நடந்தது என்று சில சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். ``சமூக ஆர்வலர் இளவரசன் கடந்த பத்து வருடங்களாகப் பிரபாகரன், திலீபன், பெரியார் போன்ற தலைவர்களின் படங்களைப் போட்டு காலண்டர் விற்பனை செய்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் போராட்டத்துக்கு அனுமதிகேட்டிருந்தார் இதை மனதில் வைத்துக்கொண்டு காவல்துறை வேண்டுமென்றே இளவரசனின் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சுப.வீரபாண்டியன் வழக்கில் கூட நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர்களின் படங்களைப் போடுவதில் எந்தக் குற்றமில்லை ஆனால் அவர்களிடம் ஆயுதமோ, பயிற்சியோ பெறக்கூடாது என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில். காலண்டர் போட்ட குற்றத்துக்காக இவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வேதனையாக இருக்கிறது'' என்றார்.