ஆருத்ரா தரிசனத்துக்காகக் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை! - அரியலூரில் பக்தர்கள் பரவசம் | Villagers worshipped Natarajar statue

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (24/12/2018)

கடைசி தொடர்பு:08:23 (24/12/2018)

ஆருத்ரா தரிசனத்துக்காகக் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை! - அரியலூரில் பக்தர்கள் பரவசம்

வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்துக்காக, பொதுமக்கள் வழிபாட்டுக்காக முக்கிய வீதிகளில் கொண்டுவரப்பட்டது. இதற்காகதான் இத்தனை வருடங்கள் காத்திருந்தோம் இனிமேல் எங்களது கிராமத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாது என்று உணர்வு பொங்க நடராஜரை வணங்கினார்கள் பொதுமக்கள். 

நடராஜர்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2003-ம் ஆண்டு 8 சாமி சிலைகள் மர்ம நபர்களால் திருடு போனது. இதில் நடராஜர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ.30 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்ததில் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்த நடராஜர் சிலையை போலீஸார் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நடராஜர் சிலை சுவாமிமலை சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

 வீதியுலா

இந்த நிலையில், ஆருத்ரா தரிசன விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்காக நீதிமன்ற அனுமதியுடன் அறநிலையத்துறை மற்றும் காவல் துறையில் உரிய அனுமதி பெற்று விழாவுக்காகச் சுவாமிமலை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த நடராஜர் சிலை ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் ஆலயத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. 

 மக்கள்

இதையடுத்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு, வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட நடராஜருக்குக் கிராம மக்கள் சார்பில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. மேலும், 40 ஆண்டுகளுக்குப் பின்னால் நடராஜர் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளையுடன் நீதிமன்ற அனுமதி முடிவதால் நாளை மீண்டும் நடராஜர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது